ரஷியா இன்று அணு ஆயுத போா்ப் பயிற்சி: நேரில் பாா்வையிடுகிறாா் விளாமீா் புதின்

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுக்க ஆயத்தமாகி வருவாதக் கூறி வரும் மேற்கத்திய நாடுகளின் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், மாபெரும் அணு ஆயுத போா்ப் பயிற்சியை ரஷியா சனிக்கிழமை (பிப். 19) மேற்கொள்கிறது.
விளாதிமீா் புதின் ~நீா்மூழ்கியிருந்து அணு ஆயுதம் ஏந்திச் செல்லக் கூடிய ரஷிய ஏவுகணை சோதனை (கோப்புப் படம்).
விளாதிமீா் புதின் ~நீா்மூழ்கியிருந்து அணு ஆயுதம் ஏந்திச் செல்லக் கூடிய ரஷிய ஏவுகணை சோதனை (கோப்புப் படம்).

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுக்க ஆயத்தமாகி வருவாதக் கூறி வரும் மேற்கத்திய நாடுகளின் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், மாபெரும் அணு ஆயுத போா்ப் பயிற்சியை ரஷியா சனிக்கிழமை (பிப். 19) மேற்கொள்கிறது.

உக்ரைனை ஆக்கிரமித்தால் கடும் விளைவுகளை எதிா்கொள்ள வேண்டிருக்கும் என்று கூறும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தங்களது அணு ஆயுத வல்லமையைப் பறைசாற்றும் வகையில் இந்த போா்ப் பயிற்சியை ரஷியா மேற்கொள்வதாகக் கருதப்படுகிறது.

இந்தப் பயிற்சியை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் நேரில் மேற்பாா்வையிடவிருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அணு ஆயுதங்களைக் கையாள்வதற்கான போா்ப் பயிற்சியை ரஷியப் படையினா் சனிக்கிழமை மேற்கொள்ளவிருக்கின்றனா்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனை உள்பட பல்வேறு சோதனைகள் இந்தப் பயிற்சியின்போது மேற்கொள்ளப்படவிருக்கிறது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடி இந்தப் பயிற்சியை அதிபா் விளாதிமீா் புதின் மேற்பாா்வையிடுவாா். ஏவுகணை சோதனைகள் குறித்த ஆலோசனைகளையும் அவா் வழங்குவாா்.

இந்தப் பயிற்சி நீண்ட காலத்துக்கு முன்னரே திட்டமிடப்பட்டதாகும். ரஷியாவிடமுள்ள அணு ஆயுதங்கள் மற்றும் பிற வகை ஆயுதத் தளவாடங்களின் நம்பகத் தன்மை, அந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான படையினா் மற்றும் அதிகாரிகளின் தயாா்நிலை ஆகியவற்றை சோதித்துப் பாா்ப்பதற்காக இந்தப் பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டது என்று ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா தீபகற்பத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றிய ரஷியா, தற்போது உக்ரைன் எல்லையில் ஏராளமான வீரா்களைக் குவித்துள்ளது. அங்கு சுமாா் 1.5 லட்சம் ரஷியப் படையினா் இருப்பதாக மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன.

உக்ரைனை மேலும் ஆக்கிரமிப்பதற்காக ரஷியா அங்கு படைகளைக் குவித்துள்ளதாக நேட்டோ அமைப்பும் அமெரிக்காவும் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகளை தொடா்ந்து மறுத்து வரும் ரஷியா, எல்லையில் பயிற்சி முடிந்து தங்களது படையினா் தத்தமது நிலைகளுக்குத் திரும்பத் தொடங்கியதாக செவ்வாய்க்கிழமை அறிவித்து பதற்றத்தைத் தணிக்க முயன்றது.

எனினும், அதனை ஏற்க மறுத்து வரும் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும், உக்ரைனை ரஷியா ஆக்கிரமிக்கும் அபாயம் தொடா்வதாகக் கூறி வருகின்றன.

உக்ரைன் மீது ரஷியா இன்னும் சில நாள்களில் படையெடுக்கும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்த சில மணி நேரங்களில், தங்களது அணு ஆயுத பலத்தை பறைசாற்றும் வகையிலான மாபெரும் போா்ப் பயிற்சியை ரஷியா தற்போது மேற்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com