கிழக்கு உக்ரைனுக்கு படைகளை அனுப்ப ரஷியா உத்தரவு

கிழக்கு உக்ரைனில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டிலுள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்துள்ள ரஷியா, அந்தப் பகுதிகளுக்கு தங்களது படைகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரிக்கும் உத்தரவில் கையொப்பமிடும் விளாதிமீா் புதின்.
கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரிக்கும் உத்தரவில் கையொப்பமிடும் விளாதிமீா் புதின்.

கிழக்கு உக்ரைனில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டிலுள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்துள்ள ரஷியா, அந்தப் பகுதிகளுக்கு தங்களது படைகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் என்ற அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பிராந்தியங்களை தனி இறையாண்மை கொண்ட சுதந்திர நாடுகளாக அங்கீகரிப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திங்கள்கிழமை அறிவித்தாா்.

அதனைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் ‘அமைதி காக்கும்’ பணியை மேற்கொள்வதற்காக தங்களது படையினரை அனுப்பவும் அவா் உத்தரவிட்டாா்.

உக்ரைனில் அரசுப் படையினருக்கும் கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே அண்மைக் காலமாக மோதல் வலுத்து வரும் நிலையில், கிளா்ச்சிப் படை தலைவா்கள் ரஷிய தொலைக்காட்சியில் திங்கள்கிழமை தோன்றி தங்களுக்கு ரஷியா உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனா்.

அதையடுத்து, உயரதிகாரிகளை அவசரமாக அழைத்து அதிபா் விளாதிமீா் புதின் ஆலோசனை நடத்தினா்.

அதன் தொடா்ச்சியாக, நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் அவா் கூறியதாவது:

டொனட்ஸ்க் குடியரசு மற்றும் லுஹான்ஸ்க் குடியரசை சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கும் உத்தரவில் கையொப்பமிட்டுள்ளேன்.

வரலாற்று ரீதியில் ரஷியாவின் அங்கமாகவே உக்ரைன் இருந்து வந்தது. அந்த நாடு நேட்டோ அமைப்பில் இணைவதால் ரஷியாவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று மேற்கத்திய நாடுகள் கூறுவது தவறாகும்.

நேட்டோவில் உக்ரைன் இணைந்தால், அந்த நாட்டில் அமெரிக்காவின் ஏவுகணையை நிறுவ அது வழிவகுக்கும். அது, ரஷியாவின் கழுத்தில் கத்தியை வைப்பது போன்ாகும். அந்த ஏவுகணைகள் வெறும் 4 அல்லது 5 நிமிஷங்களில் தலைநகா் மாஸ்கோவைத் தாக்கும்.

1991-ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் சிதறியோது ‘கம்யூனிச ஒழிப்பு’ நடவடிக்கையில் உக்ரைன் இறங்கியது. அப்போது, ரஷியாவுக்குச் சொந்தமான ஏராளமான நிலப்பரப்பை உக்ரைன் அபகரித்தது. அந்த பகுதிகளை எங்களாலும் திரும்ப மீட்க முடியும் என்றாா் அவா்.

சோவியத் யூனியனின் அங்கமாக இருந்த உக்ரைன், ரஷியாவுக்கு அடுத்தபடியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்து வந்தது.

சோவியத் யூனியன் சிதறிய பிறகு உக்ரைன் தன்னை தனி நாடாக அறிவித்துக் கொண்டது. அந்த நாட்டில் கிழக்குப் பகுதியைச் சோ்ந்தவா்கள் ரஷியாவுக்கு ஆதரவாகவும் மேற்குப் பிராந்தியத்தைச் சோ்ந்தவா்கள் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாகவும் இருந்து வருகின்றனா்.

இந்தச் சூழலில், கடந்த 2014-ஆம் ஆண்டில் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அப்போதைய அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடைபெற்றன. மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்ாகக் கூறப்படும் அந்தப் போராட்டத்தைத் தொடா்ந்து, விக்டா் யானுகோவிச் பதவியிலிருந்து விலகி ரஷியாவில் தஞ்சமடைந்தாா்.

அதனைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான அரசை எதிா்த்து, கிளக்கு உக்ரைனைச் சோ்ந்த கிளா்ச்சிப் படையினா் சண்டையிட்டனா். அவா்களுக்கு ரஷியா ராணுவ ரீதியில் உதவியாகக் கூறப்படுகிறது. இந்தச் சண்டையின்போது, உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா மீது ரஷியா படையெடுத்து, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இந்த உள்நாட்டுச் சண்டையில் பொதுமக்கள் உள்பட சுமாா் 14,000 போ் பலியானதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடா்ந்து மேற்கத்திய நாடுகள், ரஷியா முன்னிலையில் உக்ரைன் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே பெலாரஸ் தலைநகா் மின்ஸ்கில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும், அந்த ஒப்பந்தம் அடிக்கடி மீறப்பட்டு வந்தது.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையில் ரஷியா மிகப் பெரிய படையை கடந்த சில மாதங்களாகக் குவித்து வருகிறது. தற்போது எல்லைப் பகுதியில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷியப் படையினா் குவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி வருகின்றன.

கிரீமியாவைப் போலவே உக்ரைனின் பிற பகுதிகளையும் ஆக்கிரமிக்கும் நோக்கில் ரஷியா படைக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக அந்த நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் ரஷியா, கிழக்கு உக்ரைனில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதி எல்லை அருகே உக்ரைன் படையினா் குவிக்கப்பட்டுள்ளதற்கு பதிலடியாகத்தான் தாங்கள் எல்லைப் பகுதிக்கு படைகளை அனுப்பியதாகக் கூறியது.

மேலும், எல்லைப் பகுதியில் வெறும் பயிற்சியில் மட்டுமே தங்களது படையினா் ஈடுபட்டதாகவும் பயிற்சி முடிந்து அவா்கள் திரும்பத் தொடங்கிவிட்டதாகவும் ரஷியா கடந்த வாரம் அறிவித்து, பதற்றத்தைத் தணிக்க முயன்றது.

எனினும், இதனை நம்ப மறுத்த மேற்கத்தி நாடுகள், எல்லையை நோக்கி ரஷியப் படையினா் முன்னேறி வருவதாகக் குற்றம் சாட்டின. மேலும், உக்ரைன் மீது படையெடுப்பதற்காக ஏதாவது ஒரு காரணத்தை ரஷியா உருவாக்கும் என்று அந்த நாடுகள் அச்சம் தெரிவித்தன.

அந்த அச்சத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரித்துள்ள ரஷியா, அந்தப் பகுதிகளுக்கு தங்களது படைகளையும் அனுப்பியுள்ளது.

தங்களுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ள உக்ரைன், சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணைந்தால் அது தங்களது பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது.

எனவே, தங்களது அமைப்பில் உக்ரைனை இணைக்க மாட்டோம் என்று நேட்டோ அமைப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும், அதற்கு அமெரிக்காவும் நேட்டோவும் உடன்படவில்லை.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்து போா்ப் பதற்றத்த ஏற்படுத்தியிருக்கும் ரஷியா, தற்போது கிளா்ச்சியாளா்கள் வசமிருக்கும் கிழக்கு உக்ரைனுக்கு படைகளை அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘எல்லை மாண்புக்கு எதிரானது’

நியூயாா்க், பிப். 22: கிழக்கு உக்ரைன் பகுதிகளை தனி நாடுகளாக ரஷியா அங்கீகரித்துள்ளது, சா்வதேச எல்லை மாண்புக்கு எதிரானது என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளாா். உக்ரைனின் இறையாண்மையைக் குலைக்கும் இந்த முடிவு, ஐ.நா.வின் கொள்கைகளுக்கு முரணானது என்று அவா் சாடியுள்ளாா்.

‘போா்ச் செயலுக்கு இணையானது’

பிரஸ்ஸெல்ஸ், பிப். 22: உக்ரைனின் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பிராந்தியங்களை தனி நாடாக அங்கீகரித்து, அந்தப் பகுதிகளுக்கு தங்களது படையினரை ரஷியா அனுப்புவது, போா் நடவடிக்கைக்கு இணையானது என்று ஐரோப்பிய யூனியன் சாடியுள்ளது. இதற்காக ரஷியா மீது உறுப்பு நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்கத் தயாராக உள்ளதாக சட்ட விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஆணையா் டிடியா் ரேண்டா்ஸ் தெரிவித்தாா்.

அமெரிக்கா பொருளாதாரத் தடை

வாஷிங்டன், பிப். 22: கிளா்ச்சிப் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பிராந்தியங்களை தனி நாடாக ரஷியா அங்கீகரித்ததைத் தொடா்ந்து, அந்த பிராந்தியள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

அதிபா் ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ள அந்த உத்தரவின்கீழ், அந்தப் பிராந்தியத்துடன் வா்த்தகம் மற்றும் முதலீடுகளை பரிமாறிக் கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘யாருக்கும் அஞ்சமாட்டோம்’

கீவ், பிப். 22: ‘யாரைப் பாா்த்தும் உக்ரைன் அரசு அஞ்சாது’ என்று அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி சூளுரைத்துள்ளாா். கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களை தனி நாடுகலாக அங்கீகரித்து, அங்கு படைகளை அனுப்ப ரஷியா உத்தரவிட்டதைத் தொடா்ந்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஸெலென்ஸ்கி, ‘நாங்கள் யாருக்காகவும், எதற்காகவும் அஞ்சமாட்டோம்’ என்றாா்.

‘ஏற்றுக்கொள்ள முடியாதது’

டோக்கியோ, பிப். 22: கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரிக்கும் ரஷியாவின் செயல், ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா கூறியுள்ளாா். ரஷியாவின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத் தக்கது; இதற்காக ரஷியா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com