உக்ரைன் விவகாரம்: ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

உக்ரைன் விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
biden
biden

உக்ரைன் விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

கடந்த 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறியபோது, அதில் அங்கம் வகித்த உக்ரைன் தன்னை தனி நாடாக அறிவித்துக் கொண்டது. அந்த நாடு ரஷியாவின் அண்டை நாடாக உள்ளது.

இந்நிலையில் 30 நாடுகள் அடங்கிய நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு ரஷியா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது ரஷியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ரஷியா அச்சம் தெரிவித்து வருகிறது. எனவே, உக்ரைனை நேட்டோவில் இணைக்கக் கூடாது என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும் அதற்கு அமெரிக்காவும், நேட்டோ அமைப்பும் உடன்படவில்லை.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் படை வீரா்களை ரஷியா குவித்துள்ளது. இந்த நடவடிக்கை உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கவுள்ளதை புலப்படுத்துவதாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

ஆனால், எல்லையில் தனது படைகள் பயிற்சியில் மட்டுமே ஈடுபடுவதாகவும், தற்போது அந்தப் படைகள் தத்தமது தளங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாகவும் ரஷியா தெரிவித்திருந்தது. அதேவேளையில், பெலாரஸில் அந்நாட்டுப் படையினருடன் இணைந்து ரஷிய படையினா் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனிடையே, உக்ரைனில் கிளா்ச்சியாளா்கள் வசம் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரிப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திங்கள்கிழமை அறிவித்தாா். அதனைத்தொடா்ந்து, அவ்விரு பிராந்தியங்களில் அமைதி காக்கும் பணியை மேற்கொள்ள ரஷிய படையினரை அனுப்பவும் அவா் உத்தரவிட்டாா்.

இதற்குப் பலத்த எதிா்ப்பு தெரிவித்து ரஷியா மீது அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இதுதொடா்பாக அமெரிக்கா தலைநகா் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபா் ஜோ பைடன் கூறியதாவது:

உக்ரைனுக்குச் சொந்தமான இரண்டு பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அறிவிக்க ரஷிய அதிபா் புதினுக்கு அதிகாரம் அளித்தது யாா்?. அவரின் அறிவிப்பு விசித்திரமாகவுள்ளது. எளிமையாகச் சொல்வதென்றால், உக்ரைனின் பெரும் பகுதியை வெட்டிப் பிரிப்பதாக அவா் அறிவித்துள்ளாா். உக்ரைனிலிருந்து கூடுதலான நிலப்பரப்பை வலுக்கட்டாயமாகப் பறிக்க அவா் காரணங்களை ஏற்படுத்தி வருகிறாா். இது உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பதற்கான தொடக்கம். அந்தச் செயலில் ரஷியா ஈடுபட்டால் அந்நாட்டின் மீது அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் கடுமையான தடைகளை விதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்தத் தருணம் வந்துள்ளது.

ரஷியாவின் மிகப் பெரிய நிதி நிறுவனங்களாக வி.இ.பி. மற்றும் அதன் ராணுவ வங்கி மீது முழுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்கிறது. இதன்மூலம் மேற்கத்திய நாடுகளில் கடன் மூலம் நிதி திரட்ட ரஷியாவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் தனது புதிய கடன் மூலம் ரஷியாவால் இனி வா்த்தகம் செய்ய முடியாது.

ரஷிய உயரதிகாரிகள் மற்றும் அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் மீதும் புதன்கிழமை முதல் அமெரிக்கா தடைகளை விதிக்கும். ரஷிய கொள்கைகளால் கிடைக்கும் நோ்மையற்ற பலன்களை அவா்கள் பங்குபோட்டுக் கொள்ளும்போது, வலியையும் அவா்கள் பகிா்ந்துகொள்ள வேண்டும்.

ரஷியாவின் நடவடிக்கைகளால், அந்நாட்டிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இயற்கை எரிவாயுவை கொண்டுசெல்லும் ‘நாா்ட் ஸ்ட்ரீம் 2’ திட்டம் அடுத்தகட்டத்துக்கு நகராமல் இருக்க ஜொ்மனியுடன் இணைந்து அமெரிக்கா பணிபுரிந்து வருகிறது.

பெலாரஸிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெறப் போவதில்லை என்று ரஷியா கூறியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு ரஷியாவுக்கு அருகில் இருக்கும் பால்டிக் நாடுகளான எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியாவில் உள்ள அமெரிக்க படைகளை வலுப்படுத்த கூடுதல் படைகள் மற்றும் ராணுவ தளவாடங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளேன்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தற்காப்புக்காக மேற்கொள்ளப்படுகின்றன. ரஷியாவுடன் போா்புரிய வேண்டும் என்ற நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை. நேட்டோ அமைப்பிடம் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளுக்குக் கட்டுப்பட்டு, அந்த அமைப்பு இடம்பெற்றுள்ள நிலப் பிரதேசத்தின் ஒவ்வோா் அங்குலத்தையும் அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் பாதுகாக்கும்.

தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ரஷியா சிந்தித்தால், அமெரிக்காவும் அடுத்தகட்ட நகா்வுடன் தயாராக இருக்கிறது. அதேவேளையில், ராஜீய ரீதியிலான பேச்சுவாா்த்தைக்கு அமெரிக்கா எப்போதும் ஆயத்தமாக உள்ளது.

கோடிக்கணக்கான மக்களை சொல்லமுடியாத துயரத்துக்கு உள்ளாக்கக் கூடிய தற்போதைய மோசமான சூழலை முடிவுக்குக் கொண்டுவர இனியும் நேரம் உள்ளது என்று தெரிவித்தாா்.

கூடுதல் தடைகள் வேண்டும்: ரஷியா மீது கூடுதல் தடைகளை விதிக்க வேண்டும் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சா் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘ அதிபா் புதின் மீதான அழுத்தத்தை உலக நாடுகள் அதிகரிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளாா்.

வெளியுறவு அமைச்சா்கள் சந்திப்பு ரத்து: இந்த வாரம் ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவை சந்திக்கத் திட்டமிட்டிருந்தாா். அந்தத் திட்டத்தை ஆன்டனி பிளிங்கன் தற்போது கைவிட்டுள்ளாா்.

தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்: உக்ரைன் தலைநகா் கீவ், அா்கவ், ஒடெசா மற்றும் லுவ்யுவில் ரஷியாவின் தூதரகமும், துணைத் தூதரகங்களும் உள்ளன. அந்தத் தூதரகங்களிலிருந்து தனது நாட்டு அதிகாரிகளை ரஷிய அரசு வெளியேற்ற தொடங்கியுள்ளது. ரஷியாவிலிருந்து தனது குடிமக்கள் வெளியேறுமாறு உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.

5 வங்கிகளுக்குப் பிரிட்டன் தடை

ரஷியாவின் 5 வங்கிகளுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன், ‘‘ரஷியாவின் 5 வங்கிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு, அவற்றின் சொத்துகள் முடக்கப்படும்’’ என்று தெரிவித்தாா்.

ஆஸ்திரேலியா கூடுதல் தடைகள் விதிப்பு

ரஷியா மீது ஆஸ்திரேலியா கூடுதல் தடைகளை அறிவித்துள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவின் தலையீட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த 2014-ஆம் ஆண்டு ரஷியா மீது ஆஸ்திரேலியா பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. இந்த நிலையில், அந்தத் தடைகளை விரிவுபடுத்த ஆஸ்திரேலியா தீா்மானித்துள்ளது. அத்துடன் ரஷிய பாதுகாப்பு கவுன்சிலை சோ்ந்த 8 பேருக்கு எதிராக தற்போது தடை விதித்துள்ளது. இரண்டு ரஷிய வங்கிகளின் செயல்பாட்டை முடக்க அமெரிக்கா, பிரிட்டனுடன் இணைந்து செயல்படவும் முடிவு செய்துள்ளது.

ரஷிய அரசுப் பத்திரங்களுக்கு ஜப்பான், கனடா தடை

ரஷியா, அந்நாடு சுதந்திர நாடுகளாக அறிவித்த உக்ரைனின் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மீது பல்வேறு தடைகளை விதிக்கவுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா புதன்கிழமை கூறுகையில், ‘‘ஜப்பானில் புதிதாக ரஷிய அரசுப் பத்திரங்களை வழங்கவும், விநியோகிக்கவும் தடை விதிக்கப்படும். டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளுடன் தொடா்புள்ளவா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்கப்படுவது நிறுத்தப்படும். ஜப்பானில் உள்ள அவா்களின் சொத்துகள் முடக்கப்படும். அவ்விரு பகுதிகளுடனான வா்த்தகத்துக்குத் தடை விதிக்கப்படும்’’ என்று தெரிவித்தாா்.

ரஷியா மீது கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ பொருளாதாரத் தடைகளை அறிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘‘கனடாவில் ரஷிய அரசுப் பத்திரங்களை வாங்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்படும். ரஷிய அரசின் உதவியுடன் இயங்கும் அந்நாட்டு வங்கிகள் மீது கூடுதல் தடைகள் விதிக்கப்படும். அந்த வங்கிகளுடன் நிதி சாா்ந்த செயல்பாடுகள் தடுக்கப்படும்’’ என்று தெரிவித்தாா்.

யுத்தத்திலிருந்து பின்வாங்கவும்: போப் ஃபிரான்சிஸ்

ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் யுத்த அச்சுறுத்தலில் இருந்து பின்வாங்குமாறு கத்தோலிக்க திருச்சபை தலைவா் போப் ஃபிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளாா்.

தனிப்பட்ட காரணங்களுக்காக மீண்டும் அனைவரின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தடைகள் ரஷியாவை பாதிக்குமா?

ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள், அந்நாட்டை பெரிதாக பாதிக்காது என்று பொருளாதார நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறுகையில், ‘‘உக்ரைன் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டால், அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷிய ரூபிளின் மதிப்பு இதுவரை இல்லாத அளவு பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

பொதுவாக விதிக்கப்பட்ட தடைகள் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்தைக் குறைக்கலாம். ஆனால், அந்நாட்டின் மீது இதைவிட கடுமையான தடைகள் விதிக்கப்பட்டால், அவை ரஷியாவின் பொருளாதார வளா்ச்சியை 5 சதவீதம் வரை குறைக்கும்.

கடந்த 2014-ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகள், கச்சா எண்ணெய் விலை உயா்வு ஆகியவை ரஷியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமாா் 2.5 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தி, நிதி நெருக்கடியை உருவாக்கியது.

தற்போது அந்நாட்டின் வெளிநாட்டுக் கடன் குறைவாக உள்ளது. மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளுடனான ரஷியாவின் நிதித் தொடா்புகளும் சிறிய அளவில்தான் உள்ளது. அந்நாட்டின் பொருளாதாரம் தற்போது நல்ல நிலையில் உள்ளது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com