உக்ரைன் அதிபர் உயிருக்கு ஆபத்தா? அமெரிக்கா பதில்

புதின் உத்தரவை தொடர்ந்து, நிலம், வான், கடல் என அனைத்து வழியாகவும் அந்நாடு உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முக்கிய நகரங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.
உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி

இரண்டாம் உலக போருக்கு பிறகு நடைபெறும் மிக பெரிய தாக்குதலாக உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு கருதப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கிவ்வை நோக்கி ரஷியா ராணுவம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக உக்ரைன் பாதுகாப்பு படை பதிலடி அளித்துவருகிறது. இந்நிலையில், தலைநகரிலேயே தொடர்ந்து தங்கவுள்ளதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷிய அதிபர் புதின் உத்தரவை தொடர்ந்து, நிலம், வான், கடல் என அனைத்து வழியாகவும் அந்நாடு உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் நிலையில், முக்கிய நகரங்களில் குண்டு மழை வீசி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுவருகிறது. இதன் காரணமாக, அங்கிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. 12 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தலைநகர் கிவ்வை கைப்பற்றி அரசை கவிழ்ப்பதையே ரஷியா இலக்காக வைத்துள்ளது என அமெரிக்க மற்றும் உக்ரைன் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல, கிவ்வின் வடக்கில் அணு உலையாக செயல்பட்ட செர்னோபிலை ரஷியா வியாழக்கிழமை கைப்பற்றியது. பெலாரஸிலிருந்து தலைநகருக்கு செல்ல குறுகிய பாதையாக செர்னோபில் கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட பதற்றமான சூழலில், விடியோ வெளியிட்ட உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, "எதிரி என்னை நம்பர் ஒன் இலக்காகக் குறித்துள்ளார். எனது குடும்பம் தான் நம்பர் 2 இலக்கு. அவர்கள் அரசின் தலைவரை அழித்து உக்ரைனை அரசியல் ரீதியாக அழிக்க நினைக்கிறார்கள். நான் தலைநகரில் தங்க போகிறேன். எனது குடும்பமும் உக்ரைனில்தான் உள்ளது" என்றார்.

ஸெலென்ஸ்கியின் பாதுகாப்பு குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவித்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், "எனக்கு தெரிந்த வரை, ஸெலென்ஸ்கி அதிபர் பதவியில் தொடர்கிறார். உக்ரைனில்தான் உள்ளார். உக்ரைனில் உள்ள அரசாங்க அதிகாரிகள் என எங்கள் நண்பர்கள் அனைவரின் பாதுகாப்பில் நிச்சயமாக நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com