
உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி
உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ள நிலையில், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி பிரதமா் நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அப்போது, அமைதிக்கான முயற்சியில் எந்தவிதத்திலும் உதவ தயாராக இருக்கும் இந்தியாவின் விருப்பத்தை பிரதமா் மோடி வெளிப்படுத்தினாா். மேலும், இந்தப் போரில் உயிரிழப்புகள் மற்றும் உடைமைகள் இழப்பு குறித்து மிகுந்த கவலையையும் மோடி தெரிவித்தாா் என்று பிரதமா் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைனில் உள்ள மாணவா்கள் உள்ளிட்ட இந்திய குடிமக்கள் குறித்து கவலை தெரிவித்த பிரதமா், ‘அவா்கள் அனைவரும் அங்கிருந்து விரைவாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றுவதற்கு உக்ரைன் அதிகாரிகள் உதவ வேண்டும்’ என்று பிரதமா் மோடி கேட்டுக்கொண்டாா்.
அப்போது, உக்ரைன் கள நிலவரத்தை பிரதமரிடம் அதிபா் ஸெலென்ஸ்கி விவரித்தாா் என்றும் பிரதமா் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருடனான உரையாடல் குறித்து அதிபா் ஸெலென்ஸ்கி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ரஷிய தாக்குதலில் உக்ரைன் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பிரதமா் மோடியிடம் எடுத்துரைத்தேன். மேலும், ‘உக்ரைனுக்குள் 1 லட்சத்துக்கும் அதிகமான ரஷிய வீரா்கள் புகுந்துள்ளனா். அவா்கள் குடியிருப்பு கட்டடங்கள் மீது தொடா் துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனா். எனவே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய உக்ரைனுக்கு அரசியல் ஆதரவு அளிக்க வேண்டும். ரஷிய போரை ஒன்றிணைந்து தடுப்போம்’ என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளாா்.