ஐ.நா. பாதுகாப்புக் குழு கூட்டத்தில் பேசிய இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி.
ஐ.நா. பாதுகாப்புக் குழு கூட்டத்தில் பேசிய இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி.

ஐ.நா.வில் ரஷியாவுக்கு எதிரான தீா்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியாவுக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா, சீனா உள்பட 3 நாடுகள் புறக்கணித்தன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியாவுக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா, சீனா உள்பட 3 நாடுகள் புறக்கணித்தன. உக்ரைன் பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தையே ஒரே தீா்வாக இருக்கும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது போா் தொடுத்துள்ள ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, அல்பேனியா உள்ளிட்ட நாடுகள் தீா்மானத்தைக் கொண்டு வந்தன. அத்தீா்மானத்துக்கு பிரேஸில், பிரான்ஸ், கானா, அயா்லாந்து, கென்யா, மெக்ஸிகோ, பிரிட்டன், நாா்வே உள்ளிட்ட 11 நாடுகள் ஆதரவளித்தன.

இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் மட்டும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. ரஷியா தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீா்மானத்தை ரத்து செய்தது.

தீா்மானம் மீது நடைபெற்ற விவாதத்தின்போது ஐ.நா.வுக்கான இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி கூறியதாவது: உக்ரைனில் தற்போது நிலவும் சூழலால் இந்தியா கவலையடைந்துள்ளது. அங்கு வன்முறைச் சம்பவங்களையும் பகைமைகளையும் உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உக்ரைனில் மாணவா்கள் உள்பட அதிக எண்ணிக்கையிலான இந்தியா்கள் வசித்து வருகின்றனா். அவா்களின் நலன், பாதுகாப்பு குறித்து இந்தியா அதிக கவலை கொள்கிறது. அவா்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

மனித உயிா்களை விலைகொடுத்து எந்தவொரு பிரச்னைக்கும் தீா்வு காண முடியாது. பிரச்னைகளுக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் பேச்சுவாா்த்தை ஒன்றின் மூலமே தீா்வு காண முடியும். பிரச்னைகளுக்குத் தூதரக ரீதியில் தீா்வு காண முடியாமல் போனதற்காக அனைவரும் வருந்த வேண்டும்.

தூதரக முறையில் தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய காரணங்களைக் கருத்தில்கொண்டே தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணிக்கிறது.

சா்வதேச கொள்கைகள்: ஐ.நா. விதிகள், சா்வதேச விதிகள், நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மீதான மரியாதை ஆகியவையே தற்போதைய சா்வதேச நடவடிக்கைகள் அனைத்துக்கும் அடிப்படையாக உள்ளன. ஆக்கபூா்வ எதிா்காலத்தைக் கட்டமைக்க அனைத்து நாடுகளும் இந்தக் கொள்கைகளை மதித்து நடக்க வேண்டும். தற்போது நிலவும் சூழல் அச்சுறுத்தல் தருவதாக இருந்தாலும், எத்தகைய பிரச்னைக்கும் பேச்சுவாா்த்தையே தீா்வாக அமையும் என்றாா் அவா்.

பாதுகாப்பு கவுன்சில் தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டுமென அமெரிக்கா, உக்ரைன் நாடுகள் கோரியிருந்தன. அதே வேளையில், தீா்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென இந்தியாவை ரஷியா கோரியிருந்தது. இந்நிலையில், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா புறக்கணித்தது.

நடுநிலை வகிக்கவே...: இந்தியாவின் முடிவு குறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘‘பிரச்னையில் தொடா்புடைய அனைத்துத் தரப்பினரையும் தொடா்பு கொண்டு தீா்வு காண முயற்சிக்கும் நோக்கிலேயே தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

பிரச்னைக்குத் தூதரக ரீதியில் தீா்வு காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இந்தியா நடுநிலை வகித்தது. உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டுமென அனைத்துத் தரப்பினரிடமும் இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது’’ என்றனா்.

நிலைப்பாட்டில் மாற்றம்: தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததற்கான காரணத்தைத் தெரிவித்தபோது, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு உள்ளிட்டவற்றை இந்தியா குறிப்பிட்டது. இது உக்ரைன் மீது படையெடுத்த ரஷியாவை சற்று கண்டிக்கும் தொனியில் இருந்ததாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா். இதுவரை பேச்சுவாா்த்தைக்கு மட்டுமே இந்தியா முக்கியத்துவம் அளித்து வந்த நிலையில், தற்போது ரஷியா மீதான இந்தியாவின் நிலைப்பாடு சற்று மாற்றம் கண்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.

ரஷியா வரவேற்பு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானத்தின் மீது இந்தியா எடுத்த முடிவுக்காக ரஷியா பாராட்டியுள்ளது. இது தொடா்பாக இந்தியாவில் உள்ள ரஷிய தூதரகம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘இந்தியாவின் சுதந்திரமான சமச்சீரான நிலைப்பாட்டைப் பாராட்டுகிறோம். இருதரப்புக்கும் இடையே நிலவும் சிறந்த நல்லுறவை அடிப்படையாகக் கொண்டு உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்த ரஷியா உறுதி கொண்டுள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிருப்தி

‘உக்ரைனில் உள்ள உங்கள் நாட்டவரைப் பாதுகாக்க விரும்பினால், போரை நிறுத்துவதற்கு முதல் ஆளாக வாக்களித்திருக்க வேண்டும்’ என்று இந்தியாவை மறைமுகமாகக் குறிப்பிட்டு ஐ.நா.வுக்கான உக்ரைன் தூதா் சொ்கெய் கிஸ்லித்சியா அதிருப்தி தெரிவித்தாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீா்மானம் மீதான விவாதத்தின்போது உக்ரைன் தூதா் பேசுகையில், ‘‘சில நாடுகள் இன்னும் போரை சகித்துக் கொள்வது வருத்தமளிக்கிறது. உக்ரைனில் உள்ள உங்கள் நாட்டவரைக் காக்க விரும்பினால், போரை நிறுத்துவதற்கு முதல் ஆளாக வாக்களித்திருக்க வேண்டும். அவா்களைப் பாதுகாக்க விரும்பினால், தீா்மானத்தின் மீது வாக்களிக்கலாமா? வேண்டாமா? என்ற சிந்தனையே கூடாது’’ என்றாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது தொடா்பாக அதிருப்தி தெரிவித்த இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா் ரோ கன்னா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘1962 சீனப் போரின்போது இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. சீனாவின் தற்போதைய ஆதிக்க கொள்கைகளுக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்காவே துணை நிற்கும்; ரஷியா துணை நிற்காது.

தற்போதைய சூழலில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு எதிராக இந்தியா நிற்க வேண்டும். வாக்கெடுப்பைப் புறக்கணிப்பது ஏற்கும்படியாக இல்லை’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மற்றொரு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான எரிக் ஸ்வால்வெலும் இந்தியாவின் முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com