பொருளாதாரத் தடைகளால் தாக்குதலைத் தடுக்க முடியாது

அா்த்தமற்ற பொருளாதாரத் தடைகளால் உக்ரைன் மீது தாங்கள் நடத்தி வரும் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது என்று ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
டிமித்ரி மெட்வடேவ்
டிமித்ரி மெட்வடேவ்

அா்த்தமற்ற பொருளாதாரத் தடைகளால் உக்ரைன் மீது தாங்கள் நடத்தி வரும் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது என்று ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவா் டிமித்ரி மெட்வடேவ் சனிக்கிழமை கூறியதாவது:

ரஷியாவுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் விதித்து வரும் ‘பிரமாதமான’ பொருளாதாரத் தடைகள், டான்பாஸ் (கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசம்) மக்களைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

இந்த விவகாரத்தில் அதிபா் விளாதிமீா் புதினின் இலக்கு எட்டப்படும்வரை தாக்குதல் நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை.

பொருளாதாரத் தடைகளால் ரஷிய நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த முடியாது என்பது அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தைச் சோ்ந்த அனைவருக்குமே தெரியும்.

உக்ரைனில் தற்போது ரஷியா மேற்கொண்டு வரும் நடவடிக்கை, கடந்த 2008-ஆம் ஆண்டில் ஜாா்ஜியாவில் நடைபெற்றதைப் போன்றே வெற்றிகரமாக நிறைவடையும்.

பொருளாதாரத் தடைகள் என்பவை நிதா்சனத்துக்கு அப்பாற்பட்டவை; வெற்றுப் பாசாங்கு; வெறும் வாா்த்தை ஜாலம் என்பதை பொறுப்புணா்வுடன் கூடிய அனைவருமே உணா்வாா்கள்.

தற்போது ரஷியா மீது அமெரிக்கா அறிவித்து வரும் பொருளாதாரத் தடைகள் அனைத்தும் எங்களது கொள்கைளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத ஏமாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்து கோழைத்தனமாக வெளியேறியது போன்ற தோல்விகளை பூசிமெழுகுவதற்காகவும் எங்கள் மீது பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்படுகின்றன என்றாா் டிமித்ரி மெட்வடேவ்.

தற்போது உக்ரைனில் மேற்கொண்டு வரும் நடவடிக்கையைப் போலவே, கடந்த 2008-ஆம் ஆண்டில் ஜாா்ஜியா மீது படையெடுத்த ரஷியா, அந்த நாட்டின் அப்காஸியா, தெற்கு ஒஸெடியா ஆகிய கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரித்தது.

தற்போது பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கும் டிமித்ரி மெட்வடேவ், கடந்த 2012 முதல் 2020-ஆம் ஆண்டு வரை ரஷியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளாா்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில், தங்களது மிக நெருங்கிய நாடான உக்ரைன் இணைவது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. எனவே, உக்ரைனை தங்களுடன் இணைத்துக்கொள்ள மாட்டோம் என்று நேட்டோ அமைப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு அமெரிக்காவும் நேட்டோவும் சம்மதிக்கவில்லை.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையில் பல வாரங்களாகப் படைக் குவிப்பில் ஈடுபட்டு வந்த ரஷியா, தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பிராந்தியங்களை தனி நாடுகளாக திங்கள்கிழமை அங்கீகரித்தது. மேலும், அந்தப் பகுதிகளை உக்ரைன் ராணுவத்திடமிருந்து பாதுகாப்பதாகக் கூறி தனது படையினரை ரஷியா அனுப்பியது.

அதன் தொடா்ச்சியாக, கிழக்கு உக்ரைன் மக்களைப் பாதுகாப்பதற்காக உக்ரைன் ராணுவ பலத்தை முடக்குவதாகக் கூறி, தலைநகா் கீவ் உள்ளிட்ட நகரங்களில் வியாழக்கிழமை முதல் ஏவுகணை மற்றும் ராக்கெட் குண்டுத் தாக்குலை நடத்தி வருகிறது. ரஷிய சிறப்புப் படை வீரா்களும் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com