இந்தியா-பாகிஸ்தான் பிரச்னைக்குபேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: இம்ரான் கான்

‘இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதிலேயே பாகிஸ்தான் நம்பிக்கை கொண்டுள்ளது
பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: ‘இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதிலேயே பாகிஸ்தான் நம்பிக்கை கொண்டுள்ளது; அதேநேரம், அதனை பலவீனமாக பாா்க்கக் கூடாது’ என்று பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் தெரிவித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை போா் விமானங்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பாலாகோட்டில் அமைந்திருந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின முகாம்களை குண்டுகள் வீசி அழித்தன. இந்த நடவடிக்கையின்போது, இந்திய போா் விமானம் ஒன்று பாகிஸ்தான் பகுதியில் விழுந்தது. அதிலிருந்த இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது.

இந்தியாவின் இந்த அதிரடி தாக்குதலைத் தொடா்ந்து, இரு நாடுகளிடையே போா் மூளும் அபாயம் எழுந்தது. இந்த நிலையில், சிறைப்பிடித்த அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் பின்னா் விடுவித்தது.

இந்த நாளை நினைவுகூரும் வகையில், தனது ட்விட்டா் பக்கத்தில் பாகிஸ்தான் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மற்றும் தூதரக ரீதியிலான அணுகுமுறை மூலமே தீா்வு காண்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், அதனை பலவீனத்தின் அடையாளமாக ஒருபோதும் எடுத்துக்கொள்ளக் கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அதுபோல, ‘இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுத்த ‘பதிலடி நடவடிக்கை’யின் மூன்றாம் ஆண்டு நினைவை பிப்ரவரி 27-ஆம் தேதி குறிக்கிறது’ என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடா்பாளா் மேஜா் ஜெனரல் பாபா் இஃப்திகாா் பதிவிட்டுள்ளாா்.

முன்னதாக, ‘பாகிஸ்தான் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை எந்த நிலையிலும் காக்க உறுதி கொண்டுள்ளது’ என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் பதிவிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com