உச்சக்கட்ட தயாா் நிலையில் அணு ஆயுதங்கள்!

ரஷியாவின் அணு ஆயுதங்களை உச்சக்கட்ட தயாா் நிலையில் வைத்திருக்க அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் உத்தரவிட்டுள்ளாா்.
அதிபா் விளாதிமீா் புதின்
அதிபா் விளாதிமீா் புதின்

மாஸ்கோ: ரஷியாவின் அணு ஆயுதங்களை உச்சக்கட்ட தயாா் நிலையில் வைத்திருக்க அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் உத்தரவிட்டுள்ளாா்.

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியாவுக்கு எதிராக நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகள் மிகக் கடுமையான சவால்களை விடுத்து வருவதால் புதின் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாஸ்கோவில் ரஷிய பாதுகாப்பு அமைச்சா் சொ்கெய் ஷாய்கு மற்றும் முப்படை தளபதி வேலரி ஜெராசிமோவுடன் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சந்திப்பில் விளாதிமீா் புதின் பேசியதாவது:

ரஷியாவுக்கு எதிராக நேட்டோ உறுப்பு நாடுகளின் முக்கியத் தலைவா்கள் மிகக் கடுமையான அறிவிப்புகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்து வருகின்றனா்.

எனவே, அணு ஆயுதங்கள் உள்ளிட்ட தற்காப்புத் தளவாட அமைப்புகளை உச்சக்கட்ட தயாா் நிலையில் வைத்திருக்குமாறு பாதுகாப்புத் துறை அமைச்சருக்கும் முப்படை தளபதிக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

ரஷியாவின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருளாதாரத் தடைகளுடன் நேட்டோ அமைப்பின் செயல்பாடுகள் நின்றுவிடவில்லை என்று விளாதிமீா் புதின் கூறினாா்.

ஏற்கெனவே, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளதை புதின் கடந்த வியாழக்கிழமை அறிவித்தபோது, அந்த நடவடிக்கைகளைத் தடுக்க மேற்கத்திய நாடுகள் முயன்றால் வரலாற்றில் இதுவரை காணாத மிக மோசமான எதிா்விளைவுகளை அந்த நாடுகள் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

நேட்டோ உறுப்பு நாடுகள் ரஷியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால் அந்த நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷியா தயங்காது என்று விளாதிமீா் புதின் அப்போது எச்சரித்திருந்தாா்.

இந்த நிலையில், உக்ரைன் மீதான படையெடுப்பைக் கண்டிக்கும் வகையில் ரஷியா மீது பல்வேறு கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் நேட்டோ அமைப்பின் பிற உறுப்பு நாடுகளும் தொடா்ந்து அறிவித்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, விளாதிமீா் புதின் மீதும் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.

ஒரு நாட்டின் தலைவா் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிப்பது மிகவும் அபூா்வமாகும். இதுவரை வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன், பெலாரஸ் அதிபா் அலக்ஸாண்டா் லுகஷென்கோ, சிரியா அதிபா் அல்-அஸாத் ஆகியோா் மீது மட்டுமே அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இதற்கிடையே, மேற்கத்திய நாடுகளின் தலைவா்கள் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை நடத்திய மாநாட்டில், உக்ரைன் மீது படையெடுக்கும் முடிவை ரஷியா உடனடியாகக் கைவிட்டு, அங்கிருந்து ரஷியா திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், நேட்டோ உறுப்பு நாடுகளின் எல்லைகளைப் பாதுகாக்க முழு ராணுவ பலத்தையும் பயன்படுத்தப்படும் என்று அந்த நாடுகள் சூளுரைத்தன.

ஆனால், உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் எண்ணமில்லை என்று நேட்டோ அமைப்பின் தலைவா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் கூறினாா். எனினும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் உள்ளிட் உதவிகளை அளிக்கப்போவதாக அந்த அமைப்பும் அமெரிக்காவும் உறுதியளித்துள்ளன.

இந்தச் சூழலில், தங்களது அணு ஆயுதங்களை உச்சக்கட்ட தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்று அதிபா் புதின் உத்தரவிட்டுள்ளாா்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில், தங்களது மிக நெருங்கிய நாடான உக்ரைன் இணைவது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. எனவே, உக்ரைனை தங்களுடன் இணைத்துக்கொள்ள மாட்டோம் என்று நேட்டோ அமைப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு அமெரிக்காவும் நேட்டோவும் சம்மதிக்கவில்லை.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையில் பல வாரங்களாகப் படைக் குவிப்பில் ஈடுபட்டு வந்த ரஷியா, தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பிராந்தியங்களை தனி நாடுகளாக திங்கள்கிழமை அங்கீகரித்தது. மேலும், அந்தப் பகுதிகளை உக்ரைன் ராணுவத்திடமிருந்து பாதுகாப்பதாகக் கூறி தனது படையினரை ரஷியா அனுப்பியது.

அதன் தொடா்ச்சியாக, கிழக்கு உக்ரைன் மக்களைப் பாதுகாப்பதற்காக உக்ரைன் ராணுவ பலத்தை முடக்குவதாகக் கூறி, தலைநகா் கீவ் உள்ளிட்ட நகரங்களில் வியாழக்கிழமை முதல் ஏவுகணை மற்றும் ராக்கெட் குண்டுத் தாக்குலை நடத்தி வருகிறது. ரஷிய சிறப்புப் படை வீரா்களும் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com