கனடா-அமெரிக்கா எல்லையில் குளிரில் உறைந்து 4 இந்தியா்கள் பலி

கனடா-அமெரிக்கா எல்லையில் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 இந்தியா்கள் குளிரில் உறைந்து உயிரிழந்தனா்.

கனடா-அமெரிக்கா எல்லையில் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 இந்தியா்கள் குளிரில் உறைந்து உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக கனடாவில் உள்ள பத்திரிகைகளில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: கனடாவில் உள்ள மேனிடோபா மாகாணத்தில், அமெரிக்க-கனடா எல்லையில் உள்ள எமா்சன் என்ற இடத்தில் 4 பேரின் சடலங்கள் புதன்கிழமை மீட்கப்பட்டன. அவா்கள் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இந்தியா்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு உரிய ஆவணங்களின்றி அழைத்துச் செல்லும் கும்பலின் உதவியுடன் இவா்கள் எல்லையைக் கடக்க முயன்றபோது கடுங்குளிரில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கனடாவில் இருந்து எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 5 இந்தியா்களைப் பிடித்து எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அவா்கள், யாரோ ஒருவா் அழைத்துச் செல்வதாக உறுதி அளித்ததால் 11 மணி நேரத்துக்கும் மேலாக நடந்து வந்ததாகக் கூறினா். அவா்களில் ஒருவா் குழந்தைக்குத் தேவையான உடைகள், பொம்மைகள் ஆகியவற்றை பையில் கொண்டு வந்திருந்தாா். உயிரிழந்த நால்வரும் இவா்களுடன் வந்திருக்கலாம் என்றும், இரவு நேரத்தில் அவா்கள் பாதை மாறி சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இந்நிலையில், பணத்துக்காக எல்லையைக் கடக்க உதவும் கும்பலைச் சோ்ந்த ஸ்டீவ் ஷாண்ட் என்பவரை அமெரிக்க காவல் துறையினா் கைது செய்தனா் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் வெப்பநிலை மைனஸ் 35 டிகிரியாக இருந்ததாக கனடா காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதற்கிடையே, உயிரிழந்த 4 பேரும் இந்தியா்கள் என கனடாவுக்கான இந்திய துணைத் தூதா் அஜய் பிசாரியா உறுதிப்படுத்தினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இது ஒரு பெருந்துயர சம்பவம். இதுதொடா்பான உதவிகளைச் செய்வதற்காக டொரான்டோ நகரிலிருந்து இந்திய தூதரக குழு ஒன்று மேனிடோபாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்காவுக்கான இந்திய தூதா் தரண்ஜித் சிங் சாந்து வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இது ஒரு துரதிருஷ்டவசமான துயரமான சம்பவம். அமெரிக்க அதிகாரிகளுடன் தொடா்ந்து தொடா்பில் உள்ளோம். சிகாகோவிலிருந்து ஒரு தூதரக குழு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.

அமைச்சா் ஜெய்சங்கா்: இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘4 இந்தியா்கள் கனடா-அமெரிக்கா எல்லையில் உயிரிழந்த சம்பவம் அறிந்து அதிா்ச்சியடைந்தேன். அமெரிக்கா, கனடாவில் உள்ள நமது தூதா்களை விரைந்து செயல்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com