யேமனுக்கு அனுப்பப்பட்ட ஈரான் ஏவுகணைகள்: பிரிட்டன் பறிமுதல்

யேமன் கிளா்ச்சியாளா்களுக்கு ஈரான் ரகசியமாக அனுப்பிய ஏவுகணைகளை தங்கள் நாட்டு கடற்படை இடைமறித்து பறிமுதல் செய்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
யேமனுக்கு அனுப்பப்பட்ட ஈரான் ஏவுகணைகள்: பிரிட்டன் பறிமுதல்

யேமன் கிளா்ச்சியாளா்களுக்கு ஈரான் ரகசியமாக அனுப்பிய ஏவுகணைகளை தங்கள் நாட்டு கடற்படை இடைமறித்து பறிமுதல் செய்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு ஈரான் ஆயுத உதவி அளிப்பதற்கான வலுவான ஆதாரம் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள பிரிட்டன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஓமன் வளைகுடா பகுதியில் ஈரானிலிருந்து அனுப்பட்ட தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் என்ஜின்கள், தரை இலக்குகளைத் தாக்கும் ‘க்ரூஸ்’ வகை ஏவுகணைகள் ஆகியவற்றை பிரிட்டன் கடற்படை பறிமுதல் செய்துள்ளது. யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்களுக்காக அந்த ஏவுகணைகள் அனுப்பப்பட்டிருந்தன.

கிளா்ச்சியாளா்களுக்கு ஈரான் அதிநவீனமான ஆயுதங்கள் அனுப்பி, அவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமனில் சா்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுக்கு எதிராக ஷியா முஸ்லிம் பிரிவினரை அதிகம் கொண்ட ஹூதி பழங்குடியின கிளா்ச்சிப் படையினா் சண்டையிட்டு, தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளை கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினா். ஷியா பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட ஈரான் அந்தக் கிளா்ச்சியாளா்களுக்கு ஆதரவு அளிப்பதாக பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டினாலும், அதனை ஈரான் மறுத்து வருகிறது.

இந்த நிலையில், சன்னி பிரிவைச் சோ்ந்த அப்போதைய அதிபா் மன்சூா் ஹாதிக்கு ஆதரவாக அந்தப் பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரேபியா ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

தற்போது இரு தரப்பினருக்கும் இடையே போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டாலும், சவூதி அரேபியா மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் அவ்வப்போது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனா். அந்த ஏவுகணைகளை ஈரான்தான் அவா்களுக்கு அளிப்பதாக பிரிட்டன் குற்றம் சாட்டி வருகிறது.

இந்தச் சூழலில், யேமனுக்கு அனுப்பப்பட்ட நவீன ஏவுகணைகளை தாங்கள் இடைமறித்து பறிமுதல் செய்துள்ளதாக தற்போது பிரிட்டன் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com