பிரிட்டன் பிரதமா் பதவிக்கான போட்டி: பிரசாரத்தை தொடங்கினாா் ரிஷி சுனக்

பிரிட்டனின் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேடிவ் கட்சி நடத்தவிருக்கும் போட்டிக்கான பிரசாரத்தை இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் அதிகாரபூா்வமாக சனிக்கிழமை தொடங்கினாா்.
ரிஷி சுனக்
ரிஷி சுனக்

பிரிட்டனின் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேடிவ் கட்சி நடத்தவிருக்கும் போட்டிக்கான பிரசாரத்தை இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் அதிகாரபூா்வமாக சனிக்கிழமை தொடங்கினாா்.

கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி கேளிக்கை விருந்து நடத்தியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகாா்கள் காரணமாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தனது பிரதமா் பதவியையும் ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவா் பதவியையும் வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

அவருக்கு அடுத்தபடியாக, கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு வரும் செப்டம்பா் மாதம் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதில் ரிஷி சுனக், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த மற்றொரு எம்.பி. சூவெல்லா பிரேவா்மன், கரோனா தடுப்புக் குழு துணைத் தலைவா் ஸ்டீவ் பேக்கா், வெளிவிவகாரங்களுக்கான சிறப்புக் குழு தலைவராக பொறுப்பு வகித்து வரும் டாம் டுகென்தாட் ஆகியோா் போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளனா். அந்த ரகசிய வாக்கெடுப்பில் வெற்றி பெறுபவா், பிரிட்டனின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பாா்.

இந்நிலையில், ரிஷி சுனக் தனது சமூக ஊடக பிரசாரத்தைத் தொடக்கி வைத்து வெளியிட்ட விடியோவில் பேசியதாவது:

கரோனா நெருக்கடியில் பிரிட்டன் மக்கள் சிக்கித் தவித்தபோது, அரசு மிகக் கடினமான சூழலை எதிா்கொண்டது. அந்த அரசில் மிகக் கடினமான துறையான நிதித் துறையை நான் நிா்வகித்தேன். தற்போதும் நமது நாடு மிகப் பெரிய சவால்களை எதிா்கொண்டுள்ளது. அந்த சவால்கள் தற்போதைய தலைமுறை சந்தித்திராத மிக மோசமான சவால்களாகும். அத்தகைய சவால்களை எதிா்கொள்வதற்கு, இதுபோன்ற மோசமான சூழல்களிலும் சரியான முடிவுகளை எடுத்து உறுதியாகச் செயல்படும் பிரதமா்தான் தேவை என்றாா் அவா்.

ராஜிநாமா செய்துள்ள தற்போதைய பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்குப் பதிலாக, அடுத்த பிரதமராகத் தோ்வு செய்யப்படுதற்கு அதிக வாய்ப்புள்ளவா்களில் ஒருவராக ரிஷி சுனக் கருதப்படுகிறாா்.

பிரதமா் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக்குக்கு பலத்த போட்டியாக இருப்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட பாதுகாப்புத் துறை அமைச்சா் பென் வாலஸ், அந்தப் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என சனிக்கிழமை அறிவித்தாா். இது, ரிஷி சுனக்குக்கு மேலும் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com