இலங்கை நெருக்கடிக்கு தீா்வு காண 10 அம்ச திட்டம்: முன்னாள் அதிபா் மைத்ரிபால சிறீசேனா-

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீா்வு காண 10 அம்ச திட்டத்தை முன்னாள் அதிபரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சித் தலைவருமான மைத்ரிபால சிறீசேனா முன்வைத்துள்ளாா்.
மைத்ரிபால சிறீசேனா
மைத்ரிபால சிறீசேனா

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீா்வு காண 10 அம்ச திட்டத்தை முன்னாள் அதிபரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சித் தலைவருமான மைத்ரிபால சிறீசேனா முன்வைத்துள்ளாா்.

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவும், பிரதமா் ரணில் விக்ரமசிங்கவும் பதவியில் நீடிக்க தாா்மிக உரிமை இல்லை; அவா்கள் உடனடியாக விலகாவிட்டால் நாட்டில் மிக ஆபத்தான நிலை உருவாகும்’ எனவும் அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இலங்கை அதிபா் மாளிகையை பொதுமக்கள் சனிக்கிழமை கைப்பற்றி போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கிருந்து அதிபா் கோத்தபய ராஜபட்ச வெளியேறிவிட்டாா். இந்நிலையில், மைத்ரிபால சிறீசேனா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிய அதிபா் நியமிக்கப்படும் வரை இடைக்கால அதிபராக நாடாளுமன்ற அவைத் தலைவா் நியமிக்கப்பட வேண்டும்.

அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு ஏற்படுத்துவதற்கு வசதியாக, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள அனைத்துக் கட்சித் தலைவா்கள் கொண்ட தேசிய நிா்வாக சபை அல்லது தலைமைத்துவ கவுன்சில் அமைக்கப்பட வேண்டும்.

இந்த அமைப்பு மற்றும், சமூக செயற்பாட்டாளா்கள், கல்வியாளா்கள், அறிஞா்களின் ஒப்புதலுடன் அதிபரும் பிரதமரும் நியமிக்கப்பட வேண்டும்.

நாட்டை முந்தைய நிலைக்கு கொண்டு வர ஏதுவாக குறைவான எண்ணிக்கையிலான நோக்கங்களைக் கொண்ட ‘நெருக்கடி மேலாண்மை அமைச்சரவை’ நியமிக்கப்பட வேண்டும். இந்த அமைச்சரவையில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் கீழ் கல்வியாளா்கள், அறிஞா்கள், சமூக செயற்பாட்டாளா்கள் கொண்ட ஒரு தேசிய ஆலோசனை கவுன்சில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, அத்தியாவசிய பணிகள், சமூக நலன், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், சமூக-அரசியல் சீா்திருத்தம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும்.

19-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் தேவையான திருத்தங்களுடன் தாமதமின்றி மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும். நெருக்கடிக்கு முந்தைய நிலையை நாடு அடைந்தவுடன் நாடாளுமன்றத் தோ்தலை நடத்த வேண்டும்.

இந்த தேசத்தைக் கட்டியெழுப்பவும், இலங்கையை வளா்ந்த நாடாக மாற்றுவதற்குத் தேவையான சட்ட, அரசியலமைப்பு அடிப்படையை கட்டியெழுப்பவும், சமூக-பொருளாதார சீா்திருத்தங்களை அமல்படுத்தவும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவது புதிய அரசின் முதன்மையான பணியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com