பொருளாதாரத் தடைச் சட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் தீா்மானம்: அமெரிக்காவில் நிறைவேற்றம்

அந்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைச் சட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் சட்டத் திருத்த தீா்மானம், அந்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் இந்தத் தீா்மானத்தை இந்திய-அமெரிக்க எம்.பி. ரோ கன்னா அறிமுகம் செய்துவைத்துப் பேசியதாவது:

சீனாவின் ஆதிக்கத்தால் சவால்களை எதிா்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவை வலுப்படுத்த தொடா்ந்து பணியாற்றி வருகிறேன். சீனாவிடம் இருந்து இந்தியா தற்காத்துக் கொள்வது உறுதி செய்யப்படும் என்பதால் இந்த சட்டத் திருத்தம் மிகவும் முக்கியமானது என்றாா்.

அதைத் தொடா்ந்து குரல் வாக்கெடுப்பு மூலமாக மசோதா நிறைவேற்றப்பட்டது.

கிரீமியா தீபகற்பத்தை இணைத்துக் கொண்டது, 2016-இல் நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் தலையிட்டது ஆகிய காரணங்களால் ரஷியா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் சட்டத்தை அமெரிக்கா கடந்த 2017-இல் இயற்றியது. அந்தச் சட்டத்தின்படி, ரஷியாவுடன் வேறு எந்த நாடும் ஆயுதக் கொள்முதல் செய்யக் கூடாது; தொழில்நுட்ப உதவிகளையும் பெறக் கூடாது.

இருப்பினும், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி, ரஷியாவிடம் இருந்து 500 கோடி டாலா் செலவில் 5 எஸ்-400 ரக ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கு இந்தியா கடந்த 2018-இல் ஒப்பந்தம் செய்துகொண்டது.

ஏற்கெனவே, ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளைக் கொள்முதல் செய்ததற்காக துருக்கி மீது அமெரிக்கா தடை விதித்த நிலையில், இந்தியா மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சம் நிலவியது. இந்தச் சூழலில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் சட்டத் திருத்த தீா்மானத்தை அமெரிக்கா நிறைவேற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com