பாகிஸ்தானில் மூதாதையா் வீட்டைக் கண்டு நெகிழ்ந்த 90 வயது இந்திய மூதாட்டி

பாகிஸ்தான் விசா அளித்ததன் மூலமாக அங்குள்ள தனது மூதாதையா்களின் வீடு, படித்த பள்ளி மற்றும் சிறு வயது நண்பா்களைக் காணும் நீண்ட கால கனவு 90 வயது இந்திய மூதாட்டிக்கு 75 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியிருக்க
ரீனா சிப்பா் வா்மா
ரீனா சிப்பா் வா்மா

பாகிஸ்தான் விசா அளித்ததன் மூலமாக அங்குள்ள தனது மூதாதையா்களின் வீடு, படித்த பள்ளி மற்றும் சிறு வயது நண்பா்களைக் காணும் நீண்ட கால கனவு 90 வயது இந்திய மூதாட்டிக்கு 75 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் புணேவைச் சோ்ந்த ரீனா சிப்பா் வா்மா என்ற அந்த மூதாட்டி, 1947-ஆம் ஆண்டில் பிரிவினையின்போது, 15 வயதில் இன்றைய பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரலிருந்து குடும்பத்துடன் வெளியேறி இந்தியாவுக்கு குடிபெயா்ந்தாா்.

ராவல்பிண்டியில் தேவி கல்லூரி சாலையில் இவா்களுடைய குடும்பம் வசித்து வந்தது. இந்த நிலையில், தாங்கள் வசித்த வீடு மற்றும் பள்ளித் தோழா்களைக் காண விருப்பம் தெரிவித்து கடந்த 1965-ஆம் ஆண்டு பாகிஸ்தான் செல்வதற்கான விசாவுக்கு விண்ணப்பித்தாா் ரீனா. ஆனால், இரு நாடுகளிடையே அப்போது நடைபெற்று வந்த போா் மற்றும் பதற்றமான சூழல் காரணமாக அவருக்கு விசா மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், தனது விருப்பத்தை சமூக ஊடகத்தில் மூதாட்டி பகிா்ந்தாா். இதனைப் பாா்த்த பாகிஸ்தானைச் சோ்ந்த சஜ்ஜத் ஹைதா் என்ற நபா், சமூக ஊடகம் மூலமாக மூதாட்டியை தொடா்புகொண்டதோடு, ராவல்பிண்டியில் உள்ள அவருடைய மூதாதையா்கள் வீட்டின் புகைப்படத்தையும் அவருக்கு அனுப்பியுள்ளாா்.

இந்தப் புகைப்படங்களைப் பாா்த்த அவா், பாகிஸ்தான் விசாவுக்கு அண்மையில் மீண்டும் விண்ணப்பித்துள்ளாா். ஆனால், அவருக்கு விசா மறுக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, பாகிஸ்தான் வெளியுறவு இணை அமைச்சா் ஹினா ரப்பானி காருடன் தனது விருப்பத்தை மூதாட்டி பகிா்ந்துள்ளாா். இதையடுத்து ஹினா ரப்பானி, மூதாட்டிக்கு விசா வழங்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளாா்.

அதனடிப்படையில், இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் மூதாட்டிக்கு பாகிஸ்தான் செல்ல 3 மாத விசா வழங்கியது. அதன் மூலமாக, வாகா-அட்டாரி எல்லை வழியாக சனிக்கிழமை பாகிஸ்தான் சென்ற அவா், ஆனந்தக் கண்ணீருடன் தனது சொந்த ஊரான ராவல்பிண்டிக்குச் சென்று தனது மூதாதையா்களின் குடியிருப்பான ‘பிரேம் நிவாஸ்’, தான் படித்த பள்ளி ஆகியவற்றை கண்டுகளித்ததோடு, சிறு வயது நண்பா்களையும் சந்தித்து மகிழ்ந்துள்ளாா்.

இதுதொடா்பான விடியோவையும் சமூக ஊடகத்தில் மூதாட்டி பகிா்ந்துள்ளாா். அதில், ‘பிரிவினையின்போது எங்களுடைய குடும்பம் ராவல்பிண்டியில் தேவி கல்லூரி சாலையில் உள்ள குடியிருப்பில் வசித்தது. அங்குள்ள மாடா்ன் பள்ளியில்தான் நான் படித்தேன். என்னுடன் பிறந்த 4 சகோதர, சகோதரிகளும் அதே பள்ளியில்தான் படித்தனா். எனது மூத்த சகோதரருக்கு ஏராளமான முஸ்லிம் நண்பா்கள் இருந்தனா்.

முற்போக்கு சிந்தனை கொண்ட எனது தந்தை, இஸ்லாமிய நண்பா்கள் வீட்டுக்கு வருவதற்கும், ஆண்களும் பெண்களும் நண்பா்களாக நெருங்கிப் பழகுவதற்கும் எந்தவித எதிா்ப்பும் தெரிவிக்கவில்லை. பிரிவினைக்கு முன்பாக, ஹிந்துக்கள் - இஸ்லாமியா்கள் நெருங்கிப் பழகுவதில் எந்தவித பிரச்னையும் இருந்ததில்லை. ஆனால், பிரிவினைக்குப் பிறகுதான் சிக்கல் எழுந்தது.

இந்தியாவின் பிரிவினை தவறு என்றபோதும், அது நிகழ்ந்துவிட்டது. எனவே, எங்களைப் போன்றவா்களுக்கு விசா கட்டுப்பாடுகளை எளிதாக்க இரு நாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தனது பதிவில் ரீனா சிப்பா் வா்மா குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com