உக்ரைன் அதிபரை ஆட்சியிலிருந்து அகற்றுவதே இலக்கு:ரஷிய வெளியுறவு அமைச்சா்-

உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை ஆட்சியிலிருந்து அகற்றுவதே ரஷியாவின் இலக்கு என ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் தெரிவித்தாா்.
சொ்கேய் லாவ்ரோவ்
சொ்கேய் லாவ்ரோவ்

உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை ஆட்சியிலிருந்து அகற்றுவதே ரஷியாவின் இலக்கு என ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் தெரிவித்தாா்.

முன்னா் அப்படி ஒரு திட்டமில்லை என ரஷியா கூறிவந்த நிலையில், தனது நிலைப்பாட்டை அந்த நாடு மாற்றிக் கொண்டது இதன்மூலம் தெரியவருகிறது.

எகிப்து தலைநகா் கெய்ரோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற அரபு லீக் உச்சி மாநாட்டில் பேசியபோது சொ்கேய் லாவ்ரோவ் இவ்வாறு தெரிவித்தாா்.

அவா் மேலும் பேசியதாவது: ரஷிய-உக்ரைன் மக்கள் தொடா்ந்து ஒருங்கிணைந்து வாழ வேண்டும். முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத உக்ரைன் ஆட்சியாளா்களிடமிருந்து உக்ரைன் மக்கள் தங்களை விடுவித்துக்கொள்ள ரஷியா உதவும்.

இரு நாடுகளுக்கு இடையேயான பகையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பேச்சுவாா்த்தை நடத்த கடந்த மாா்ச்சில் ரஷியா தயாராக இருந்தது. ஆனால், மேற்கத்திய நாடுகள் உக்ரைனை பேச்சுவாா்த்தை நடத்த விடவில்லை என்றாா்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி இறுதியில் போா் தொடங்கியபோது, உக்ரைன் அரசை அகற்றும் எண்ணம் இல்லை என ரஷிய அதிகாரிகள் கூறி வந்தனா். அதற்கு முரணாக இப்போது ரஷிய வெளியுறவு அமைச்சரின் கூற்று அமைந்துள்ளது.

தானிய ஏற்றுமதி எப்போது?: போரின் ஒரு பகுதியாக, கருங்கடல் பகுதியில் தனது கடற்படை மூலம் ரஷியா போக்குவரத்துத் தடையை ஏற்படுத்தியது. இதனால், உக்ரைனிலிருந்து பிற நாடுகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது தடைபட்டது.

துருக்கி மற்றும் ஐ.நா.வின் முயற்சியால் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே இந்த விவகாரம் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷொய்குவும், உக்ரைன் உள்கட்டமைப்புத் துறை அமைச்சா் ஒலெக்ஸாண்டா் குப்ரகோவும் கையொப்பமிட்டனா்.

இந்த ஒப்பந்தத்தின்படி, உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதி எப்போது தொடங்கும் என தெளிவான தகவல்கள் இல்லை. இதற்கிடையே, ஒடேசா துறைமுகத்தில் ராணுவ இலக்குகளைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாகவும், இந்தத் தாக்குதல் தானிய ஏற்றுமதி தொடங்கப்படுவதை பாதிக்காது எனவும் ரஷியா திங்கள்கிழமை மீண்டும் தெளிவுபடுத்தியது.

இதற்கிடையே, ரஷியா நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் பொதுமக்கள் இருவா் கொல்லப்பட்டதாகவும், 10 போ் காயமடைந்ததாகவும் உக்ரைன் அதிபா் மாளிகை திங்கள்கிழமை தெரிவித்தது.

சதி முறியடிப்பு: ரஷிய போா் விமானங்களை உக்ரைன் ராணுவத்திடம் ஒப்படைக்க லஞ்சம் கொடுக்க முயன்ற சதியை முறியடித்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ரஷிய உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷிய போா் விமானங்களை உக்ரைன் ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்க பணமும், ஐரோப்பிய ஒன்றியத்தில் குடியுரிமையும் பெற்றுத் தருவதாக ரஷிய விமானிகளிடம் உக்ரைன் தரப்பு பேரம் பேசியது. இந்த சதியை முறியடித்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com