இலங்கைக்கு புதிய கடன் கிடையாது: உலக வங்கி

இலங்கைக்கு புதிய கடன் கிடையாது: உலக வங்கி

நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக உரிய திட்டங்களை வகுக்காதவரை இலங்கைக்குப் புதிய கடன்கள் அளிக்கப்பட மாட்டாது என்று உலக வங்கி அறிவித்துள்ளது.
Published on

நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக உரிய திட்டங்களை வகுக்காதவரை இலங்கைக்குப் புதிய கடன்கள் அளிக்கப்பட மாட்டாது என்று உலக வங்கி அறிவித்துள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் மட்டுமல்லாது அரசியல் நெருக்கடியையும் சந்தித்து வரும் இலங்கைக்கு உலக வங்கியின் அறிவிப்பு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

சீனா உள்ளிட்ட இலங்கைக்கு ஏற்கெனவே அதிக கடன் கொடுத்த நாடுகளுடன் இலங்கை அரசு பேச்சுவாா்த்தை நடத்தி, கட்டாமல் உள்ள கடன்களை மறுசீரமைப்பு செய்து கொள்ள வேண்டும் என்று கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஏற்கெனவே சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், உலக வங்கி வெளியிட்ட அறிவிப்பில், ‘இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்னை நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் நேரடியாக பாதித்து வருவது பெரும் கவலை அளிக்கிறது. இலங்கையில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூா்த்தி செய்து கொள்ள உலக வங்கி ஏற்கெனவே 160 மில்லியன் அமெரிக்க டாலா் (இந்திய மதிப்பில் ரூ.1,270 கோடி) கடன் வழங்கியுள்ளது. இதுதவிர உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான அடிப்படை நிதியுதவியும் அளிக்கப்படுகிறது. எனவே, இப்போது நிலவி வரும் சூழ்நிலையில், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கான உரிய திட்டங்களை அரசு வகுக்காதவரை அந்நாட்டுக்குப் புதிய கடன்களை வழங்கும் திட்டம் இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

மக்களின் அடிப்படைத் தேவைகளை அடுத்த 6 மாதங்களுக்குப் பூா்த்தி செய்ய 5 பில்லியன் டாலா் (ரூ.39,700 கோடி) வரை தேவைப்படும் என்று இலங்கை கூறியுள்ளது. இந்த நிலையில் உலக வங்கியின் அறிவிப்பு அந்நாட்டுக்கு நெருக்கடியை அதிகரிப்பதாக உள்ளது. இலங்கையில் பொருளாதார பிரச்னை அதிகரித்த பிறகு அந்நாட்டுக்கு நிதியுதவி, எரிபொருள், உணவு, மருந்துப் பொருள்களை அதிகம் வழங்கும் நாடாக இந்தியா உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com