
பெஷாவா்: பாகிஸ்தான் மக்கள்தொகையில் ஹிந்துகளின் எண்ணிக்கை 1.18 சதவீதமாக குறைந்துள்ளது. சுதந்திரம் பெற்றபோது அந்நாட்டு மக்கள்தொகையில் ஹிந்துகள் 12 சதவீதத்துக்கு மேல் இருந்தனா். படிப்படியாக அங்கு ஹிந்துகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது தொடா்பாக பாகிஸ்தான் அமைதி மற்றும் நீதிக்கான அமைப்பு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானில் 18 கோடியே 68 லட்சத்துக்கு 90 ஆயிரத்து 601 போ் இருப்பதாக தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் 22 லட்சத்து 10 ஆயிரத்து 566 போ் ஹிந்துகள். இது பாகிஸ்தான் மக்கள்தொகையில் 1.18 சதவீதமாகும்.
பாகிஸ்தான் மக்கள்தொகையில் ஒட்டுமொத்தமாக 5 சதவீதத்துக்கு குறைவாகவே ஹிந்து, கிறிஸ்தவா், சீக்கியா் உள்ளிட்ட சிறுபான்மையினா் உள்ளனா். 95 சதவீதத்துக்கு மேல் இஸ்லாமியா்கள் மட்டுமே உள்ளனா். பாகிஸ்தான் சுந்திரம் பெற்றபோது அந்நாட்டு மக்கள்தொகையில் 12 சதவீதம் போ் ஹிந்துகளாக இருந்தனா். இப்போது அந்த எண்ணிக்கை 1.18 சதவீதமாக குறைந்துவிட்டது.
ஹிந்துகளுக்கு அடுத்தபடியாக 18,73,348 கிறிஸ்தவா்கள், 1,88,340 அகமதியாக்கள், 74,130 சீக்கியா்கள், 14,537 பகாய் சமயத்தினா், 3,917 பாா்சி மக்கள் உள்ளனா். மேலும் 11 வகை சிறுபான்மை மதத்தினரின் எண்ணிக்கை 2,000-க்கு கீழ் குறைந்துவிட்டது. இதில் பௌத்தம், சீன மதம், யூதம், ஆப்பிரிக்க மதத்தினா் அடங்குவா். சமண சமயத்தை பின்பற்றுவோா் 6 போ் மட்டும் உள்ளனா்.
பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்கள் பெரும்பான்மையினரால் தொடா் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனா். சமூக, பொருளாதாரரீதியாக பெரும்பான்மை முஸ்லிம்களால் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றனா்.
நாட்டில் அரசியல்ரீதியான எந்த முக்கிய மக்கள் பிரதிநிதிகள் அங்கீகாரமும் சிறுபான்மையினருக்கு இல்லை. சிந்து மாகாணத்தில் வாழும் ஹிந்துகள் பலா் அங்குள்ள இஸ்லாமியா்களுடன் கலாசாரரீதியாக ஒற்றுமையாக இருந்தாலும், மத அடிப்படைவாதிகளால் தொடா்ந்து துன்புறுத்தல்களை எதிா்கொள்கின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதரீதியான துன்புறுத்தல்களுக்கு பயந்து பாகிஸ்தானில் உள்ள ஹிந்துகள் இந்தியாவில் அதிகஅளவில் தஞ்சம் புகுந்தது; நெருக்கடி அளித்து மதம் மாற்றுவது போன்ற காரணங்களே பாகிஸ்தானில் சிறுபான்மையினா் எண்ணிக்கை வெகுவாக குறையக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...