அமெரிக்காவுடன் எந்த ராணுவ ஒப்பந்தமும் இல்லை: நேபாளம்

அமெரிக்க ராணுவத்துடன் நேபாள அரசு ராணுவ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக வெளியானத் தகவலை நேபாள ராணுவம் மறுத்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

அமெரிக்க ராணுவத்துடன் நேபாள அரசு ராணுவ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக வெளியானத் தகவலை நேபாள ராணுவம் மறுத்துள்ளது.

நேபாளத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் இது போன்ற எந்த ஒரு ஒப்பந்தத்திலும் நேபாள அரசு கையெழுத்திடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றையும் நேபாள ராணுவம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறிருப்பதாவது, “நேபாள அரசு தனது அணி சேராக் கொள்கையில் தெளிவாக உள்ளது. அதனால், நேபாளத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்து தரும் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அமெரிக்கா நேபாள அரசுடன் எந்த ஒரு ராணுவ ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. சில ஆன்லைன் ஊடகங்களால் நேபாளத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பொய்யானத் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஆன்லைன் ஊடகங்களில் கூறுவது போல் அந்த ஒப்பந்தம் பாதுகாப்பு ஒப்பந்தமோ அல்லது ராணுவ ஒப்பந்தமோ இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் நேபாள மக்களின் நலன் சார்ந்ததாகும். நேபாள அரசு இந்த ஒப்பந்தத்திற்காக கடந்த 2015ஆம் ஆண்டு விண்ணப்பித்தது. மீண்டும் 2017ஆம் ஆண்டில் விண்ணப்பித்தது. அமெரிக்கா தரப்பில் இந்த ஒப்பந்தம் கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இயற்கை சீற்றங்களான நிலநடுக்கம், வெள்ளம் மற்றும் தீ விபத்து உள்ளிட்ட இக்கட்டான காலங்களில் அமெரிக்கா தனது உதவியினை நேபாளத்திற்கு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கபட்ட நேபாள மக்களுக்கு அமெரிக்கா சார்பில் உதவி வழங்கப்பட்டதையும் நேபாளத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் சுட்டிக் காட்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com