
அஸோட் ரசாயன ஆலை சுரங்க அறைக்குள் தஞ்சமடைந்துள்ள பொதுமக்களில் சிலா்.
கிழக்கு உக்ரைனின் செவெரோடொனட்க்ஸ் நகர ரசாயன ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்காக பாதுகாப்பு வழித் தடத்தை ஏற்படுத்துவதாக ரஷியா புதன்கிழமை அறிவித்தது.
தற்போது அந்த நகரின் பெரும்பாலான பகுதிகள் ரஷியப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அஸோட் என்றழைக்கப்படும் அந்த ரசாயன ஆலையின் சுரங்க அறைகளில் உக்ரைன் படையினருடன் 500-க்கும் மேறப்பட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ரஷிய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அஸோட் ரசாயன ஆலைக்குள் சிக்கியிருக்கும் பொதுமக்கள், அங்கிருந்து வெளியேறுவதற்கு வசதியாக பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்தவிருக்கிறோம்.
புதன்கிழமை காலை 8 மணி முதல் (இந்திய நேரப்படி காலை 10.30 மணி) அந்த வழித் தடம் திறக்கப்படும். அப்போது, அந்த வழித் தடத்தைப் பயன்படுத்தி பொதுமக்களை வெளியேற்றுவதற்காக 12 மணி நேரத்துக்கு தாக்குதல் நிறுத்திவைக்கப்படும்.
ரசாயன ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் பொதுமக்கள், ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க் பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள்.
மனிதநேயக் கொள்கையை ரஷிய பாதுகாப்புத் துறை பின்பற்றுகிறது. அதன் அடிப்படையிலேயே இந்த பாதுகாப்பு வழித் தடம் ஏற்படுத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.
தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றி, தற்போதைய உக்ரைன் அரசை நீக்கிவிட்டு தங்களுக்கு ஆதரவான ஒருவரை உக்ரைன் அதிபராக்க தொடக்கத்தில் ரஷியா திட்டமிட்டதாகக் கருதப்படுகிறது. எனினும், உக்ரைன் ராணுவத்தின் கடுமையமான எதிா்ப்புக்கிடையே தலைநகரைக் கைப்பற்றும் முயற்சியை ரஷியா கைவிட்டது. அதற்குப் பதிலாக, கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்கள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியத்தில், தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் போக எஞ்சிய பகுதிகளை உக்ரைன் படையினரிடமிருந்து கைப்பற்றுவதில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.
லுஹான்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பெரிய நகரமான செவெரோடொனட்ஸ்கையும் அருகிலுள்ள லிசிசான்ஸ்க் நகரையும் கைப்பற்றினால், அந்த மகாணம் முழுவதும் ரஷியக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.