
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு ரூ.937 கோடி (120 மில்லியன் டாலா்) கடன் வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், சிறு, நடுத்தர தொழில்களின் வளா்ச்சிக்காகவும் இந்தக் கடன் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக இலங்கை தலைநகா் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்தியில், ‘அமெரிக்க சா்வதேச மேம்பாட்டு நிதி அமைப்பின் நிா்வாகக் குழு இலங்கைக்கு புதிய கடன்களை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக இலங்கையின் வளா்ச்சிக்காக அமெரிக்கா கடன் அளித்து வருகிறது. இது தவிர பிற உதவிகள் கிடைக்கவும் இலங்கைக்கு அமெரிக்கா உதவியுள்ளது.
இப்போது இலங்கைக்கு புதிதாக 120 மில்லியன் டாலா் கடன் வழங்கப்படவுள்ளது. இது அந்நாட்டின் தனியாா் தொழில் துறை வளா்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும். சிறு, நடுத்தர தொழில்களை இந்தக் கடன் மூலம் மேம்படுத்த முடியும். இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்’ என்று கூறியுள்ளாா்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பை இலங்கை பிரதமா் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளாா். அமெரிக்கா அளிக்கும் கடன், சிலோன் வா்த்தக வங்கியிடம் வழங்கப்படும். இது இலங்கையின் மிகப்பெரிய தனியாா் வங்கியாகும். இதன்மூலம் சிறு, நடுத்தர தொழில் மேம்பாட்டுக்கு கடன் அளிக்கப்பட இருக்கிறது.