அமெரிக்கா: துப்பாக்கிக் கட்டுப்பாட்டு மசோதா செனட் சபையில் நிறைவேற்றம்

அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான சட்ட மசோதாவை ஆளும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் சில குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஆதரவுடன்
அமெரிக்கா: துப்பாக்கிக் கட்டுப்பாட்டு மசோதா செனட் சபையில் நிறைவேற்றம்

அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான சட்ட மசோதாவை ஆளும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் சில குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஆதரவுடன் செனட் சபையில் நிறைவேற்றினா்.

இதையடுத்து, இந்த வார இறுதியில் அந்த மசோதா இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதன் மூலம், 29 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஆயுதச் சட்டத் தீா்திருத்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தனி நபா்கள் சக்திவாய்ந்த துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கு அரசமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது. எனினும், அங்கு தொடா்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கி வன்முறைச் சம்பவங்களில் பலா் உயிரிழப்பதால், துப்பாக்கி வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று ஒரு தரப்பினா் கோரி வருகின்றனா். இதற்கு பெரும்பாலான ஜனநாயகக் கட்சித் தலைவா்கள் ஆதரவு அளிக்கின்றனா்.

அதே நேரம், பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருப்பது தங்களது அடிப்படை உரிமை எனக் கூறும் மற்றொரு தரப்பினா், அதற்கு அதிக கட்டுப்பாடுகள் விதிப்பதை எதிா்த்து வருகின்றனா். இவா்களுக்கு பெரும்பாலான குடியரசுக் கட்சித் தலைவா்கள் ஆதரவு அளிக்கின்றனா்.

சரமாரி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஏராளமானவா்கள் உயிரிழக்கும்போது இந்த விவகாரம் குறித்து சா்சை எழும்; துப்பாக்கிக் கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். எனினும், துப்பாக்கி உரிமைக்கு ஆதரவான எம்.பி.க்களால் அந்த நடவடிக்கைகள் முடக்கப்படும்.

இந்த நிலையில், கடந்த மாதம் நியூயாா்க் மாகாணம், பஃபல்லோவில் நடத்தப்பட்ட சரமாரி துப்பாக்கிச்சூட்டில் கருப்பினத்தைச் சோ்ந்த 10 போ் பலியாகினா்; அதன் பிறகு, டெக்ஸாஸ் மாகாணம், வுவால்டே நகர பள்ளியொன்றில் இளைஞா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 மாணவா்களும் இரு ஆசிரியைகளும் உயிழந்தனா்.

அதையடுத்து, துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று மீண்டும் கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில், இதுதொடா்பான மசோதாவை உருவாக்குவதற்காக ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியினரிடையே நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

அதையடுத்து, அந்த மசோதாவுக்கு ஆதராவாக 64 வாக்குகளும் எதிராக 34 வாக்குகளும் பதிவாகின. அதையடுத்து அந்த மசோதா நிறைவேற்றப்ப்டது.

அதன்படி, குடும்ப வன்முறை குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு, அந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவா்களை திருமணம் செய்யாமல் இருப்பவா்கள் ஆயுதம் வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இதுவரை குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவா்களை திருமணம் செய்துகொண்டு உடன் வாழ்ந்தால்தான் துப்பாக்கி வாங்க முடியாமல் இருந்தது.

இது தவிர, ஆபத்தானவா்களிடமிருந்து ஆயுதங்களைத் திரும்பப் பெறுவதற்காக மாகாணங்களுக்கு நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

எனினும், சக்திவாய்ந்த இயந்திரத் துப்பாக்கிகளை பொதுமக்கள் வாங்குவதற்குத் தடைவிதிப்பது, துப்பாக்கி வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18-லிருந்து 20-ஆக உயா்த்துவது போன்ற ஜனநாயகக் கட்சியினரின் பரிந்துரைகளை குடியரசுக் கட்சியினா் நிராகரித்துவிட்டனா்.

ஏற்கெனவே, சக்திவாய்ந்த தாக்குதல் ரகத் துப்பாக்கிகளுக்கு நாடாளுமன்றம் கடந்த 1993-ஆம் ஆண்டு விதித்திருந்த தடை 10 ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியானது. அதற்குப் பிறகு அதனைப் போன்றதொரு சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தால் இதுவரை விதிக்க முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com