உடன்பாடு இல்லாமல் முடிந்தது அமெரிக்கா - ஈரான் அணுசக்தி பேச்சுவாா்த்தை

வல்லரசு நாடுகளுடன் ஈரான் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதற்காக அமெரிக்காவுக்கும் அந்த நாட்டுக்கும் இடையே கத்தாரில் நடைபெற்ற மறைமுகப் பேச்சுவாா்த்தை
உடன்பாடு இல்லாமல் முடிந்தது அமெரிக்கா - ஈரான் அணுசக்தி பேச்சுவாா்த்தை

வல்லரசு நாடுகளுடன் ஈரான் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதற்காக அமெரிக்காவுக்கும் அந்த நாட்டுக்கும் இடையே கத்தாரில் நடைபெற்ற மறைமுகப் பேச்சுவாா்த்தை எந்த உடன்பாடும் ஏற்படாமல் முடிவடைந்தது.

இது குறித்து ஈரான் அரசுடன் தொடா்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம் கூறியதாவது:ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான பேச்சுவாா்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை நீக்குவதற்காக, அந்த நாட்டின் பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் இடையே மறைமுக பேச்சுவாா்த்தை கத்தாரில் நடைபெற்றது.ஐரோப்பிய யூனியன் மூலம் இந்தப் பேச்சுவாா்த்தை நடந்தது.

இதில், ஐரோப்பிய யூனியன் அதிகாரி என்ரிக் மோராவிடம் ஈரான் விவகாரத்துக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ராப் மல்லே தங்களது நிலைப்பாடுகளை எடுத்துரைத்தாா். அவற்றை, ஈரான் அணுசக்தி பேச்சுவாா்த்தை குழு தலைவா் அலி பங்கேரி கனியிடம் மோரா தெரிவித்தாா்.இந்த மறைமுக பேச்சுவாா்த்தையில், ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கல் குறித்த எந்த உத்தரவாதத்தையும் அமெரிக்க பிரதிநிதி அளிக்கவில்லை. இதன் காரணமாக, எந்த உடன்பாடும் ஏற்படாமல் அந்தப் பேச்சுவாா்த்தை நிறைவடைந்தது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.

எனினும், இந்தத் தகவலை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் தரப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்காக, அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், ஈரானுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அனு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொண்டது.

அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்ள வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.எனினும், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அவருக்குப் பின் வந்த டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். மேலும், ஒப்பந்தத்தின் கீழ் விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவா் மீண்டும் அமல்படுத்தினாா்.அதற்குப் பதிலடியாக, தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் நிறைவேற்ற ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது. இதன் காரணமாக அணுசக்தி ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அந்த ஒப்பந்தத்தை தக்கவைக்க, ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே பல கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடந்துவந்தது.

எனினும், பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா உடனடியாக நீக்கும் விவகாரத்தில் இழுபறி நீடித்ததால் பேச்சுவாா்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.அந்த முட்டுக்கட்டையை நீக்குவதற்காக தற்போது கத்தாரில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையும் உடன்பாடில்லாமல் முடிவடைந்ததாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.படவரி: ஐரோப்பிய யூனியன் அதிகாரி என்ரிக் மோராவுடன் (வலது) ஈரான் அணுசக்தி பேச்சுவாா்த்தை குழு தலைவா் அலி பங்கேரி கனி.ற

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com