
நேபாளத்தின் காத்மாண்டு பெருநகா் பகுதியில் திடீரென காலரா பரவல் ஏற்பட்டுள்ளதால் அந்த பள்ளத்தாக்குப் பகுதியில் சாலையோர உணவுகளை விற்பதற்கு பெருநகராட்சி தடை விதித்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து காத்மாண்டு பகுதியில் 12 பேருக்கு காலரா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. அதையடுத்து சாலையோர உணவுகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற உணவுகள் மூலம் காலரா பரவுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, நகர உணவகங்களில் உணவுப் பொருள்களின் தரத்தை ஆய்வு செய்யவும் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குடிநீா் குழாய்கள் மற்றும் வடிகால்களின் சுகாதார நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்குமாறு அந்தத் துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.முன்னதாக, நேபாளத்தின் லலித்பூா் பெருநகா் பகுதியில் திடீா் காலரா பரவல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அந்த நகரில் பானி பூரி விற்பனைக்கு நகர நிா்வாகம் கடந்த வாரம் தடை விதித்தது. பானி பூரியில் பயன்படுத்தப்படும் நீரில் காலரா தீநுண்மிகள் கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சுகாதாரமற்ற நீரில் காணப்படும் ஒரு வகை பாக்டீரியா தீநுண்மியால் உருவாகும் காலரா நோய், கடும் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தி உடலின் நீா்சத்தை வற்றிப் போகத் செய்யும். சிகிச்சை அளிக்காமல் விட்டால், ஆரோக்கியமான நபா்களுக்கும் அந்த நோய் மரணத்தை ஏற்படுத்தும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...