குவாட் தலைவர்கள் இன்று சந்திப்பு...உக்ரைன் குறித்து விவாதிக்கப்படுமா?

இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து தலைவர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்வார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குவாட் தலைவர்கள் சந்திப்பு
குவாட் தலைவர்கள் சந்திப்பு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் கலந்து கொள்ளும் குவாட் தலைவர்களின் சந்திப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்ளவுள்ளார். இணையம் வழியாக இது நடைபெறவுள்ளது.

கடைசியாக, கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், வாஷிங்டனில் குவாட் தலைவர்களின் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இன்று நடைபெறவுள்ள தலைவர்கள் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "தலைவர்கள் தங்கள் உரையாடலைத் தொடர இந்த மெய்நிகர் உச்சி மாநாடு ஒரு வாய்ப்பை வழங்கும். மேலும் அவர்கள் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்ட முக்கிய முன்னேற்றங்கள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததையடுத்து நடைபெறும் முதல் குவாட் மாநாடு என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்க, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகள், ரஷியாவுக்கு எதிராக ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது. ஆனால், இந்திய வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

புதின் தலைமையிலான ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க உலக நாடுகளை அமெரிக்கா ஒருங்கிணைத்துவருகிறது. ரஷியாவை தனிமைப்படுத்தக் கோரிவரும் ஆஸ்திரேலியா, உக்ரைனுக்கு உதவி அளித்துவருகிறது. இதேபோல, ரஷிய நிறுவனங்களின் மீது ஜப்பான் தடை விதித்துள்ளது. உக்ரைனிலிருந்து வெளியேறும் மக்களை ஏற்று கொள்ள தயார் என்றும் அந்நாடு கூறியுள்ளது.

உக்ரைன் விவகாரத்தை பொறுத்தவரை, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மாற்று கருத்து நிலவிவருகிறது. குறிப்பாக, ரஷியாவுடன் வரலாற்று ரீதியாகவே நீண்ட காலமாக இந்தியா நல்ல உறவை பேணிவருகிறது. அதே சமயத்தில், அமெரிக்கா உடனான உறவு கடந்த 20 ஆண்டுகளில் பெரும் வளர்த்தி அடைந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com