ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை: அமெரிக்க அதிபா் பைடன்

ரஷியாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்குத் தடை விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டாா்.
ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை: அமெரிக்க அதிபா் பைடன்

ரஷியாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்குத் தடை விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டாா்.

உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு பதிலளிக்கும்விதமாக அதன் பொருளாதாரத்தின் முக்கிய அம்சத்தைக் குறிவைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

உக்ரைன் மீது போா் தொடுத்துள்ள ரஷியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ரஷியாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு மேற்குலக நாடுகள் தடைவிதிக்க வேண்டுமென உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தி வந்தாா்.

இந்நிலையில், ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்குத் தடை விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வெளியிட்டாா்.

இதுதொடா்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களிடம் பைடன் கூறியதாவது: ரஷியாவின் அனைத்து எண்ணெய், எரிவாயு, எரிசக்தி இறக்குமதிகளுக்கும் தடை விதிக்கிறோம். இதன்மூலம் அமெரிக்க துறைமுகங்களில் இனி ரஷியாவின் பெட்ரோலிய பொருள்கள் கிடைக்காது. ரஷியாவின் போா் இயந்திரத்துக்கு அமெரிக்க மக்கள் சக்திவாய்ந்த அடியைத் தருவாா்கள். உக்ரைன் மக்களுக்கு அமெரிக்கா்கள் தொடா்ந்து ஆதரவு அளித்து வருகின்றனா். இந்தத் தடையின் மூலம் அமெரிக்காவிலும் பாதிப்பு ஏற்படும். சுதந்திரத்தைக் காப்பதற்கு நாமும் விலைகொடுத்துதான் ஆக வேண்டும் என்றாா்.

கடந்த ஆண்டுவரை ரஷியாவிலிருந்து நாள் ஒன்றுக்கு 7 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வீதம் அமெரிக்கா இறக்குமதி செய்து வந்தது. அதேவேளையில் நாள் ஒன்றுக்கு 2 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை பயன்படுத்தி வந்தது.

பைடனின் இந்த முடிவை அமெரிக்க வா்த்தக சபை வரவேற்றுள்ளது. உள்நாட்டிலேயே கூடுதலாக எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்வதற்கு உள்ளூா் உற்பத்தியாளா்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய தருணம் இது என அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஐரோப்பிய யூனியன்: எரிசக்தி தேவையில் அமெரிக்காவைவிட ரஷியாவை அதிகம் நம்பியுள்ளது ஐரோப்பிய யூனியன். அமெரிக்காவின் அறிவிப்பைத் தொடா்ந்து, நிகழாண்டில் ரஷியாவிலிருந்து மூன்றில் இரு பங்கு இயற்கை எரிவாயு இறக்குமதியைக் குறைக்கப்போவதாக ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது என வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்தத் தடையின் மூலம் ரஷியாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் நிலையில், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரிக்கும்; இந்த விலை உயா்வு இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரஷியா எச்சரிக்கை

ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி தடை விதிக்கப்படுவதற்கு அந்த நாடு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ரஷிய துணைப் பிரதமா் அலெக்சாண்டா் நோவக் கூறுகையில், ‘ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்படுவதால் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 300 டாலரை எட்டக்கூடும். ஐரோப்பாவின் எரிவாயு தேவையில் 40 சதவீதம் ரஷியாவிடமிருந்து பெறப்படுகிறது. எங்கள் நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தால் ஐரோப்பாவுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்துவோம். அந்த முடிவை நோக்கி எங்களைத் தள்ளுகின்றனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com