பிரிந்த சோவியத் யூனியன், பிரியாத கொள்கைகள்

பிரிந்த சோவியத் யூனியன், பிரியாத கொள்கைகள்

சோவியத் யூனியன் 1991-ஆம் ஆண்டு உடைந்ததுடன் அமெரிக்கா-ரஷியா இடையே நிலவி வந்த பனிப்போர் முடிவுக்கு வந்தது.

சோவியத் யூனியன் 1991-ஆம் ஆண்டு உடைந்ததுடன் அமெரிக்கா-ரஷியா இடையே நிலவி வந்த பனிப்போர் முடிவுக்கு வந்தது. சோவியத் யூனியனின் அங்கமாக இருந்த பகுதிகள் ரஷியாவைத் தவிர்த்து 15 சுதந்திர நாடுகளாக மாறின. சோவியத் யூனியனின் தலைமை சர்வ அதிகாரம் படைத்ததாகவும் மனித உரிமைகள், சுதந்திரத்துக்கு மதிப்பாளிக்காமல் இருந்ததுமே அதன் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தது.
 ஆனால், சிறந்த எதிர்காலத்தை நோக்கி சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற நாடுகள் பெரும்பாலானவை பழைய சர்வாதிகார கொள்கைகளிலேயே சிக்குண்டதுதான் பெரும் சோகம். சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து தங்களைக் குடியரசாக அறிவித்துக் கொண்ட நாடுகள், பொருளாதாரம் சார்ந்த பல்வேறு விவகாரங்களுக்குத் தொடர்ந்து ரஷியாவையே சார்ந்துள்ளன. அந்நாடுகளின் தலைவர்களும் ரஷியாவுக்கு ஆதரவான கொள்கைகளைக் கொண்டவர்களாகவே இருந்தனர்; இருக்கின்றனர். ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் காலத்திலும் இந்த அரசியல் நிலை தொடர்கிறது.
 சோவியத் யூனியனில் இருந்து பிரிந்துசென்ற பல நாடுகளின் தலைவர்கள் ரஷிய அதிபர் புதினின் "கைப்பாவை'களைப் போன்றே செயல்பட்டு வருகின்றனர். அவற்றில் சில நாடுகள் மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கமாவதை அதிபர் புதின் என்றுமே விரும்பியதில்லை. தற்போது வரை கூட ""ரஷியா என்ற நாடு, புவியியல் எல்லைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது ரஷிய எல்லையைத் தாண்டி வாழும் மக்களை ஒன்றிணைத்த கலாசாரம்'' என்று கூறி வருகிறார். அவர்களுக்கு ஏதேனும் பிரச்னை நேர்ந்தால், அதைத் தடுப்பது தனது கடமை என அவர் கருதி வருகிறார்.
 தனது கட்டுப்பாட்டை மீறி மேற்கத்திய நாடுகளுடன் தொடர்புவைத்துக் கொள்ள முயலும் நாடுகள் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஜார்ஜியா, கிரீமியா, உக்ரைன் என அத்தகைய தாக்குதல் நடவடிக்கைகளை ரஷியா தொடர்ந்து வருகிறது. இது சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற மற்ற நாடுகளுக்கு அதிபர் புதின் விடுக்கும் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அதிபர் புதினின் "கைப்பாவை'களாக அறியப்படும் தலைவர்களுக்கும் அந்த எச்சரிக்கை பொருந்தும். அத்தகைய தலைவர்கள் குறித்த சிறுகுறிப்பும் நாடுகள் சந்தித்து வரும் பிரச்னைகளும்...
 

அலெக்சாண்டர் லுகஷென்கோ
 பெலாரஸ்
* 1994 முதல் அதிபர்
* சோவியத் ராணுவத்தில் பணியாற்றியவர்.
* ஐரோப்பிய நாடுகளில் நீண்டகால அதிபராக இருப்பவர்.
* அதிபர் புதினின் நெருங்கிய நண்பர்.
* அடக்குமுறை மூலமாகத் தொடர்ந்து ஆட்சியில் இருப்பவர்.
 2020 தேர்தலில் பெரும் முறைகேடுகள் நிகழ்ந்தன; போராட்டக் காரர்கள் ஒடுக்கப்பட்டனர்; பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர்; 450-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்; மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டன.

இல்ஹம் அலியெவ்
 அஜர்பைஜான்
* 003 முதல் அதிபர்
* சோவியத் காலத்தில் மாஸ்கோ சர்வதேச உறவுகள் நிறுவனத்தின் பேராசிரியர்.
* 1993 முதல் 2003 வரை அதிபராக இருந்த ஹைதர் அலியெவின் மகன்.
* மக்கள் கடும் மனித உரிமை மீறல்களைச் சந்திப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
* ஊழல் தலைவிரித்தாடும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, அஜர்பைஜான்.
* சிறுபான்மையின கிறிஸ்தவர்களுக்கு எதிராக இனப்படுகொலை.
* போராட்டங்களுக்குத் தடை; அரசை விமர்சிப்பவர்களுக்கு சிறை; மோசமான நிலையில் பத்திரிகை சுதந்திரம்; எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அடக்குமுறை; அர்மீனியாவுடன் மோதல்.

கர்பங்குலி பெர்திமுகாமிதோ
 துர்க்மெனிஸ்தான்
* 2007 முதல் அதிபர்
* பரம்பரையாக சோவியத் ராணுவத்தில் உயர்பொறுப்பு.
* தனக்கு 20 அடியில் தங்கச்சிலை நிறுவிக் கொண்டவர்.
* வேலையின்மை, ஏழ்மைநிலை அதிகம்.
* உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு; அரசு நிர்வாகத்தில் ஊழல் அதிகம்; சிறுபான்மையினர் மீது அடக்குமுறை; விமர்சகர்கள் திடீரென மாயமாகும் சூழல்; கரோனா பரவலை அரசு எதிர்கொண்ட விதத்தை விமர்சித்த பத்திரிகையாளர்களுக்கு சிறை.

எமோமலி ரகுமான்
 தஜிகிஸ்தான்
* 1994 முதல் அதிபர்
* சோவியத் யூனியன் கடற்படையில் பணியாற்றவர்.
* மத்திய ஆசியாவின் நீண்ட கால அதிபர்.
* மத்திய ஆசியாவின் ஏழை நாடு; தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் அரசியல் தலைவர்கள் கைது; சிறை அதிகாரிகளே கைதிகளைக் கொல்லும் நிலை; தன்னார்வ அமைப்புகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள்; பத்திரிகைகள் மீது அடக்குமுறை; கருத்து சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடு; அரசை விமர்சிப்பவர்களைத் "தவறான செய்தியைப் பரப்புபவர்கள்' எனக் கூறி தண்டனை; அதிபர் பதவிக்காலக் கட்டுப்பாடு நீக்கம்; வெளிநாட்டு உடைகளை அணியத் தடை; அரசமைப்புச் சட்டம் பலமுறை மாற்றியமைப்பு.
 
 தொகுப்பு: சுரேந்தர் ரவி
 வடிவமைப்பு: சி.சிலம்பரசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com