காலநிலை மாற்றம் நம்மை என்ன செய்யும் என்று கேட்பவர்களுக்கு..

காலநிலை மாற்றங்களால், உலகம் முழுவதும் பெரிய அளவில் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால், தேவைப்படும் பொருள்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
காலநிலை மாற்றத்தால் தக்காளி, பாதாம், காபி உற்பத்தி பாதிப்பு
காலநிலை மாற்றத்தால் தக்காளி, பாதாம், காபி உற்பத்தி பாதிப்பு


புது தில்லி: மேக நகர்வு, வறட்சி, சூறாவளி, கடும் மழை, வெள்ளம் போன்ற காலநிலை மாற்றங்களால், உலகம் முழுவதும் பெரிய அளவில் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால், தேவைப்படும் பொருள்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

தக்காளியை எடுத்துக் கொண்டால் அதிக அளவில் இத்தாலியில் விளைகிறது. ஐரோப்பா கண்டம்தான் அதிகளவில் தக்காளியை ஏற்றுமதி செய்யும். 60 - 70 லட்சம் மெட்ரிக் டன் தக்காளியை ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுமதி செய்கிறது.

ஆனால், கடந்த ஆண்டு தக்காளி விளைவிக்கும் பண்ணைகளின் அளவு 19 சதவீதம் குறைந்தது. இனி இது மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

தக்காளி விளைய சூடான வெப்பநிலை சரியானதாக இருக்கும். ஆனால், தற்போது இத்தாலி சற்று குளிர் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழை போன்ற காரணிகளால் தக்காளி விளைய உகந்த காலநிலை இல்லாமல் போயுள்ளது.

வெப்பநிலை குறைவதால், தக்காளி பழுக்க காலதாமதமாகும். இதுவே நீடித்தால் தக்காளி விளைவிப்பது குறையும். தேவை அதே அளவில் இருந்து வரத்து குறையும், இதனால், சந்தைகளில் தக்காளி விலை அதிகரிக்கும்.

கலிஃபோர்னியாவில் 80 சதவீத பாதாம் உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாதாம் உற்பத்தி செய்ய மனித உழைப்பும், அதிக காலமும் ஆகும். பாதாம் பருப்புகள் ஏற்றுமதி தரத்துக்கு வளர்க்கப்பட வேண்டும் என்றால், அதற்கு அதிகமான தண்ணீர் தேவைப்படும். ஆனால் கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக, ஏற்கனவே வளர்த்து வந்த பாதாம் மர தோப்புகளைக் கூட விவசாயிகள் பராமரிக்காமல் விடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பாதாம் உற்பத்தி குறைந்து அதனால் கடுமையான விலையேற்றம் காணப்பட்டது. இதேநிலைதான் சோயாபீன்னுக்கும் ஏற்பட்டது.

பிரேசிலில் ஏற்பட்ட கால மாற்றத்தால் காபி கொட்டைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. காற்றில் ஈரப்பதம் அதிகமிருக்கும் இடங்களில்தான் காபி மரங்கள் நன்கு வளரும். பிரேசிலில் காற்றில் ஈரப்பதம் குறைந்து வறட்சியாக மாறியதால் காபி மரங்கள் வளர உகந்த சூழல் இல்லாமல் போனது. இதனால் காபி உற்பத்தி பாதிக்கப்பட்டது, காபி பிரியர்களை கவலையடையச் செய்தது.

இது முக்கியமான மூன்று பொருள்கள் மற்றும் மூன்று நாடுகளில் ஏற்பட்ட கால நிலைமாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தரவுகள் மட்டுமே என்பதை நினைவில் கொள்க.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com