இலங்கையில் காகிதத் தட்டுப்பாடு: பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் அச்சு காகிதம் தட்டுப்பாட்டால், லட்சக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் சனிக்கிழமை தெர
இலங்கையில் காகிதத் தட்டுப்பாடு: பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு


கொழும்பு: கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் அச்சு காகிதம் தட்டுப்பாட்டால், லட்சக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், பொருளாதார மந்த நிலை, அந்நியச் செலவாணி வீழ்ச்சி, ஏற்றுமதி, இறக்குமதி, சுற்றுலாத்துறைகள் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. 

நிதி பற்றாக்குறையால் தேவையான அச்சு காகிதத் தயாரிப்பு, வினாத் தாள் அச்சடிப்புக்கு தேவையான பொருள்கள், மை உள்ளிட்டவைகளின் இறக்குமதிக்கு நிதி இல்லாததால் இறக்குமதி தடைப்பட்டுள்ளன.

இந்நிலையில், வினாத்தாள்களை அச்சிட அச்சு காகிதம் இல்லாததால், நாளை திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் பள்ளிகளில் அடுத்த நிலைக்கு மாணவர்கள் செல்வதற்கு பருவத் தேர்வு முடிவுகள் கணக்கிடப்படுவதால் ஏறத்தாழ 40.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வினாத்தாள்களை அச்சிட அச்சு காகிதம் இல்லாததால் அதிகாரிகள் தடுமாற்றம் அடைந்துள்ளனர். 

அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்கான அந்நியச் செலாவணி இருப்பு இல்லாததால் ஏற்பட்ட பலவீனமான பொருளாதார நெருக்கடியால்,  நாட்டில் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருள்கள் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. 

இலங்கை கடனில் சுமார் 6.9 பில்லியன் டாலர்கள் இந்த ஆண்டு செலுத்தப்பட வேண்டும் ஆனால் அதன் வெளிநாட்டு நாணய கையிருப்பு பிப்ரவரி மாத இறுதியில் சுமார் 2.3 பில்லியன் டாலராக இருந்தது.

இலங்கை அரசு பால் பவுடர், சர்க்கரை, பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றை வழங்கி இருந்தாலும் மளிகைப் பொருள்கள் மற்றும் எண்ணெய் வாங்குவதற்காக வணிக நிறுவனங்கள் முன்பு நீண்ட வரிசைகள் மக்கள் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளன. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு கடன் அளித்த முக்கிய நாடுகளில் ஒன்றான சீனாவிடம் கடன் திருப்பி அளிப்பதற்கான காலக்கெடுவை நிறுத்தி வைத்து உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளது ஆனால் பெய்ஜிங்கில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com