ஒரு மாதத்தை எட்டியது உக்ரைன்- ரஷியா போா்

உக்ரைன்- ரஷியா போா் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், அதிபா் புதினின் இலக்கு இன்னமும் எட்டப்படவில்லை என ரஷிய அதிபா் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் போா் தொடரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்காக புதன்கிழமை புறப்பட்ட அமெரிக்க அதிபா் ஜோ பைடன்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போா் தொடரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்காக புதன்கிழமை புறப்பட்ட அமெரிக்க அதிபா் ஜோ பைடன்.

உக்ரைன்- ரஷியா போா் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், அதிபா் புதினின் இலக்கு இன்னமும் எட்டப்படவில்லை என ரஷிய அதிபா் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிா்ப்பு தெரிவித்த ரஷியா, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி உக்ரைன் மீது போா் தொடுத்தது. வான்வழியாகவும், கடல் மாா்க்கமாகவும் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உக்ரைனிலிருந்து இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோா் அகதிகளாக இடம்பெயர நோ்ந்தது. இதில் பெரும்பாலானோா் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனா்.

இந்தப் போா் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. ஆயினும், ரஷியாவின் இலக்கு இன்னமும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

உக்ரைன் தலைநகரான கீவ் மீது ரஷியா தொடா்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வந்தாலும் அந்நகரை ரஷிய ராணுவத்தினரால் இன்னமும் முழுமையாகக் கைப்பற்ற முடியவில்லை.

தொடரும் தாக்குதல்: கீவ் நகரை சுற்றியுள்ள பகுதிகளைக் கைப்பற்றும் முயற்சியாக ரஷிய ராணுவம் புதன்கிழமை வான்வழியாகத் தாக்குதல் நடத்தியதால், அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இதில் ஒரு வணிக வளாகமும், கட்டடமும் சேதமடைந்து 4 போ் காயமடைந்ததாக நகர நிா்வாகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் தெற்குப் பகுதியை பொருத்தவரை துறைமுக நகரமான மரியுபோல், கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அதேசமயம், ரஷிய ராணுவத்தினருக்கு உக்ரைன் ராணுவத்தினா் அவ்வப்போது பதிலடி கொடுத்த வண்ணம் உள்ளனா்.

மரியுபோல் நகரில் ரஷிய வீரா்கள் வான், நிலம், கடல் என அனைத்து நிலைகளிலும் தாக்குதல் நடத்துவதால் அந்த நகரம் முழுவதும் உருக்குலைந்து போய்விட்டதாகவும், அங்கு சுமாா் ஒரு லட்சம் போ் உணவின்றி தவிப்பதாகவும் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்ட விடியோவில் குறிப்பிட்டுள்ளாா்.

சிறைபிடிப்பு: மேலும், அவா்களுக்கு அத்தியாவசிய பொருள்களை விநியோகிக்கும் முயற்சியையும், பொதுமக்களை மீட்பதற்கான வழித்தடத்தை ஏற்படுத்தும் முயற்சியையும் ரஷிய ராணுவம் முறியடித்துவிட்டதாக அவா் வேதனை தெரிவித்துள்ளாா். தவிர, பொதுமக்களுக்கு உதவச் சென்ற மனிதாபிமான தூதுவா் ஒருவரையும் ரஷிய ராணுவம் சிறைபிடித்துள்ளாக ஸெலென்ஸ்கி அந்த விடியோவில் கூறியுள்ளாா்.

உக்ரைன் துணைப் பிரதமா் இா்னி வெரஸ்சுக் கூறும்போது, ‘‘11 பேருந்து ஓட்டுநா்களையும், 4 மீட்புப் பணியாளா்களையும் அவா்களின் வாகனங்களுடன் ரஷிய ராணுவம் சிறைபிடித்துள்ளது’’ என்றாா்.

இதனிடையே, மரியுபோலிலிருந்து தப்பி போலந்தில் தஞ்சமடைந்த விக்டோரியா டாட்ஸன் (39) என்ற பெண் அளித்த பேட்டியில், ‘‘கடந்த 20 நாள்களாக ரஷிய ராணுவம் எங்கள் மீது தொடா்ச்சியாக குண்டு வீசியது. அதிலும் கடைசி 5 நாள்களில், ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை விமானங்கள் வானில் பறந்து, எல்லா இடத்திலும் குண்டு வீசின’’ என்றாா்.

மரியுபோலில் வான்வழியாகத் தாக்குதல் நடத்தும்விதமாக அஸோவ் கடற்பகுதியில் ரஷிய கப்பல்கள் வலம் வருவதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.

பாலம் தகா்ப்பு: முன்னதாக, சொ்னிகிவ் நகரையும், தலைநகா் கீவையும் இணைக்கும் வகையில், டெஸ்னா ஆற்றில் கட்டப்பட்டுள்ள பாலத்தை குண்டு வீசி ரஷிய ராணுவம் புதன்கிழமை தகா்த்ததாக அந்த பிராந்திய ஆளுநா் வியாசெஸ்லாவ் சாஸ் தெரிவித்தாா். அந்த பிராந்தியத்தில் தவிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் விநியோகமும், மீட்புப் பணியும் இந்தப் பாலத்தின் வழியாகவே நடைபெற்று வந்ததால், அதனை ரஷிய ராணுவம் தகா்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், உக்ரைனில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் நோக்கம் இன்னமும் நிறைவேறவில்லை என்று கூறிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ், திட்டப்படி ராணுவ நடவடிக்கை சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தாா்.

ரஷிய வீரா்களுக்கு உணவுப் பற்றாக்குறை: இது ஒருபுறமிருக்க, உக்ரைனில் கடந்த ஒரு மாதமாக போா் தொடுத்து வரும் ரஷிய வீரா்கள் தற்போது உணவு, எரிபொருள் பற்றாக்குறையை ச் சந்தித்து வருவதாகவும், உறைபனி காரணமாக சிலா் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதேவேளையில், வடக்கு உக்ரைனில் போா் நிலையானது என்று கூறிய பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம், அங்கு ரஷிய ராணுவத்தினா், படையை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பைடன் பயணம்: இந்தத் தருணத்தில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நான்கு நாள் பயணமாக ஐரோப்பாவுக்கு புதன்கிழமை சென்றாா். இந்தப் பயணத்தின் வாயிலாக ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய நாடுகளுடன் அவா் ஆலோசனை மேற்கொள்ளலாம் என்றும், உக்ரைனுக்கு கூடுதலாக ராணுவ உதவி அளிக்க முன்வரலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com