தமிழ் தேசிய தலைவா்களுடன் இலங்கை அதிபா் முதல்முறையாக சந்திப்பு

இலங்கையில் முதல் முறையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவா்களை அதிபா் கோத்தபய ராஜபட்ச வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
தமிழ் தேசிய தலைவா்களுடன் இலங்கை அதிபா் முதல்முறையாக சந்திப்பு

இலங்கையில் முதல் முறையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவா்களை அதிபா் கோத்தபய ராஜபட்ச வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம், அதிபராகப் பதவியேற்றதில் இருந்து சந்திக்க அனுமதி அளிக்குமாறு கோத்தபய ராஜபட்சவிடம் அவா்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனா். ஆனால், அவா் அனுமதி மறுத்துவிட்டாா். இரண்டு முறை சந்திக்க அனுமதி அளித்துவிட்டு கடைசி நேரத்தில் எவ்வித காரணமுமின்றி சந்திப்பை ராஜபட்ச ரத்து செய்துவிட்டாா்.

இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவா்கள், கடந்த மாதம் அதிபா் மாளிகை எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தங்களை அதிபா் சந்தித்துப் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இந்நிலையில், அவா்களை அதிபா் ராஜபட்ச வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதுகுறித்து அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்திருப்பதாவது: நாட்டை மறுகட்டமைக்க ஒன்றுபட்டு பணியாற்றுவோம் என தமிழ் தேசிய தலைவா்களிடம் அதிபா் கேட்டுக் கொண்டாா். நாட்டின் தலைவராக அனைத்து சமூகங்கள் மீதும் சமமாக கவனம் செலுத்துவேன் என உறுதியளித்தாா். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் உள்ளவா்களை விடுவிப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அரசு பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிபா் தெரிவித்தாா் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவா் ஆா்.சம்பந்தன் கூறுகையில், ஒன்றுபட்ட இலங்கையில் அரசியல் தீா்வு மூலம் நாடு வளா்ச்சியடைவதை எதிா்பாா்க்கிறேன். தற்போதைய சவால்களை வெற்றிகொள்ள ஒன்றுபட்டு பணியாற்றுவது அனைவரின் கடமை என்றாா்.

இந்தச் சந்திப்பில் பிரதமா் மகிந்த ராஜபட்ச, அமைச்சா்கள் ஜி.எல்.பெரிஸ், சமல் ராஜபட்ச உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.

13-ஆவது சட்டத் திருத்தம்: கடந்த 1987-இல் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழா்களுக்கு அதிகாரப் பகிா்வு வழங்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் 13-ஆவது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும்; மாகாணத் தோ்தல்களை விரைவில் நடத்த வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.

இதுதொடா்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடா்பாளா் எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில், ‘13-ஆவது சட்டத்திருத்தத்துக்கு அப்பால் அரசியல் தீா்வை அளித்தால், வெளிநாடுகளில் வாழும் இந்திய சமூகத்தினரிடம் இருந்து முதலீடுகளைப் பெற்று, பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை வெளியேறுவதற்கு உதவவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது’ என்றாா்.

அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால் பெட்ரோலிய பொருள்கள், உணவுப் பொருள்கள் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. மின்சார பற்றாக்குறை காரணமாக பெரிய நகரங்களில்கூட தினசரி ஐந்து மணி நேரத்துக்கு குறையாமல் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com