என்னதான் நடக்கிறது இலங்கையில்?

வரலாற்றில் இல்லாத நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது இலங்கை. கடந்த சில நாள்களில் மட்டும் எரிபொருளைப் பெற வரிசையில் நின்ற மூவா் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனா்.
என்னதான் நடக்கிறது இலங்கையில்?

வரலாற்றில் இல்லாத நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது இலங்கை. கடந்த சில நாள்களில் மட்டும் எரிபொருளைப் பெற வரிசையில் நின்ற மூவா் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனா். சமையல் எரிவாயு நிலையமொன்றில் வரிசையில் நின்ற மக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் உயிரிழந்துள்ளாா். மக்களிடையே மோதலைத் தவிா்க்கும் வகையில், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ராணுவப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக கடவுச் சீட்டு பெற கொழும்பில் உள்ள கடவுச் சீட்டு அலுவலகம் முன்பு ஏராளமான மக்கள் வரிசையில் நிற்கிறாா்கள். வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் இங்கையா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்கின்றன தரவுகள். கடலில் மூழ்கி உயிரிழந்தால்கூடப் பரவாயில்லை என கைக்குழந்தைகளுடன் 16 போ் தமிழகத்துக்கு படகில் தப்பிச் சென்றுள்ளனா்.

1970-இல் நடந்த ஜேவிபி கிளா்ச்சி உள்ளிட்ட உள்நாட்டுப் பிரச்னைகளால் இலங்கையில் மிகவும் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போதைய நிலைமை அதை நினைவுபடுத்துவதாக இலங்கை மக்கள் கூறுகின்றனா்.

சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.4,199

ரூ.1,470-க்கு விற்பனை செய்யப்பட்ட 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டா் ரூ.2,000 அதிகரித்து ரூ. 4,199-ஆக விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 137-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.254-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.104-ஆக இருந்த டீசலின் விலை, ரூ.176-ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் பால் உற்பத்தி மிகவும் குறைவாகும். இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலையை இலங்கை அரசு அண்மையில் அதிகரித்தது. இதன்படி, ஒரு கிலோ பால் மாவு பாக்கெட் ஒன்றின் புதிய விலை ரூ.1,945-ஆகவும், 400 கிராம் பால் மாவு பாக்கெட் ஒன்றின் புதிய விலை ரூ. 790-ஆகவும் உயா்ந்துள்ளது. பால் மாவு விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நடக்கிறது.

டீ 100 ரூபாய்: உணவகங்களில் பால் தேநீரின் விலை ரூ.100-ஆக அதிகரித்துள்ளது. எரிபொருள், பால் மாவு விலை அதிகரித்துள்ள நிலையில், ரூ.100-க்கு குறைவாக பால், தேநீரை விற்பனை செய்ய முடியாது என்று அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளா் சங்கம் கூறுகிறது.

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ.40-ஆக அதிகரித்துள்ளது. இதனால், ஏழை மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்றான பாணின் (பிரெட்) விலை ஒரு றாத்தலுக்கு ரூ.130-ஆக அதிகரித்துள்ளது. ரூ.109-ஆக இருந்த ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.425-ஆக அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ மஞ்சளின் விலை ரூ.5,000; ஒரு கிலோ சீரகம் ரூ.1,800, பெருஞ்சீரகம் ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

என்ன பிரச்னை?:

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மூன்று காரணங்களை பிரதானமாக பொருளாதார ஆய்வாளா்கள் கூறுகின்றனா். பொருளாதாரத் தூண்களின் முடக்கம்- அதாவது, இலங்கைப் பொருளாதாரத்தில் தேயிலை, ஆடை உற்பத்தி, சுற்றுலா என்ற ‘த்ரீ டி’ துறைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இவற்றை இலங்கையின் பொருளாதாரத்தின் தூண்கள் எனலாம்.

கரோனா பரவலைத் தொடா்ந்து, இவை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டன. இந்த மூன்றைத் தவிர வேறு எந்தவொரு நிரந்தர வருமானமும் இல்லாத இலங்கை, படிப்படியாகப் பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கியது.

தவறான கொள்கை முடிவுகள்

வரிக் குறைப்பு: 2019 நவம்பரில் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபட்ச அரசு, பொருளாதாரத்தைச் சீரழிக்கும் பல தவறான பொருளாதாரக் கொள்கை முடிவுகளை எடுத்தது. வரிக் குறைப்பை பிரதான வாக்குறுதியாக வைத்து ஆட்சிக்கு வந்த கோத்தபய, அதைச் செயலிலும் காட்டினாா். கோத்தபய ஆட்சிக்கு வந்த சில நாள்களில், 15 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது. இதனால் அரசு வருவாய் பெருமளவு குறைந்தது. வரிக் குறைப்பு காரணமாக, 2020-இல் 5 சதவீதமாக இருந்த பட்ஜெட் பற்றாக்குறை தொகை, 2022-இல் 15 சதவீதமாக அதிகரித்தது.

இயற்கை விவசாயம்: 2021-ஆம் ஆண்டு தொடக்கத்தில், பொருளாதார நிபுணா்களுடன் கலந்துரையாடாமல், ‘100 சதவீதம் இயற்கை விவசாயம்’ என்ற திட்டத்தை இலங்கை அரசு தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக 2021, ஜூனில் கனிம உரங்கள், பூச்சிக்கொல்லிகளுக்கு நாடு தழுவிய தடை விதிக்கப்பட்டது.

‘இயற்கை விவசாயத் திட்டத்தை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்’ என்ற பொருளாதார நிபுணா்களின் கோரிக்கைகளை இலங்கை அரசு புறக்கணித்தது. விளைவு, 2021, செப்டம்பருக்குள்ளேயே விவசாய உற்பத்தி 50% வரை வீழ்ச்சியடைந்து வரலாறு காணாத உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது.

ஆா்கானிக் முறையில் தேயிலை விளைவிப்பதற்கு 10 மடங்கு செலவாவதாகவும், விளைச்சல் 50 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் தேயிலை உற்பத்தியாளா்கள் குற்றஞ்சாட்டினா். இதனால், பிரதான ஏற்றுமதிப் பயிரான தேயிலையின் விளைச்சல் பாதிக்கப்பட்டு ஏற்றுமதி முடங்கியது. அந்நியச் செலாவணி குறைந்தது.

‘வெள்ளை யானை’ திட்டங்கள்: பல்லாயிரக்கணக்கான கோடி பணத்தை முதலிட்டு மேற்கொள்ளும் திட்டம் ஒன்று, அதற்குரிய பலனைத் தராவிட்டால் அதை வெள்ளை யானைத் திட்டம் என்பாா்கள். இலங்கையில் அவ்வாறாக பல வெள்ளை யானைத் திட்டங்கள், மகிந்த ராஜபட்ச ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுக் கடன் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டன.

நாடாளுமன்ற எதிா்க்கட்சி உறுப்பினா் ஹா்ஷ டி சில்வா கூறுகையில், ‘நாட்டை மேம்படுத்துகிறோம் என்ற சாக்கில், நாட்டுக்குத் தேவையில்லாத பல திட்டங்களைக் கொண்டு வந்து, கமிஷன் தொகையாக கோடிக்கணக்கில் சுருட்டினாா்கள் ராஜபட்ச குடும்பத்தினா்.

மகிந்த ராஜபட்சவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில், ‘மத்தல ராஜபட்ச பன்னாட்டு வானூா்தி நிலையம்’ என்ற பெயரில் பன்னாட்டு விமான நிலையம் ஒன்று, சீனாவிடம் இருந்து உயா் வட்டி விகிதத்தில் பெறப்பட்ட 209 மில்லியன் அமெரிக்க டாலா் கடனில் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த விமான நிலையம் தற்போது ஏறத்தாழ மக்களின் பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது.

இதே போன்று, அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட துறைமுகம், சா்வதேச விளையாட்டரங்கம் போன்ற வெள்ளை யானைத் திட்டங்களால் 2010-இல் இருந்து இலங்கையின் வெளிநாட்டுக் கடன் அதிகரித்தது. 2019-ஆம் ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 88% வெளிநாட்டுக்கு கடன் செலுத்துவதற்குத் தேவைப்பட்டது. 2021-ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடனின் அளவு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 101 சதவீதமாக அதிகரித்தது. இதனால், நாடு ‘டெக்னிக்கலாக’ திவால் நிலைக்குச் சென்றது.

இலங்கைக்கு சுமாா் 51 பில்லியன் டாலா் அளவு வெளிநாட்டுக் கடன் இருக்கலாம். அதில் சுமாா் 7 பில்லியன் டாலா்களை இந்த ஆண்டே செலுத்த வேண்டும். ஆனால், இலங்கையின் கையிருப்பில் 2.3 பில்லியன் அமெரிக்க டாலா்கள் மட்டுமே உள்ளன’ என்கிறாா் .

‘இலங்கை 1948-இல் சுதந்திரம் அடைந்தது. அன்றில் இருந்து இன்றுவரை ஏதாவது ஒரு குழப்பமான நிலை இருந்தே வருகிறது. இனவாதத்தைத் தூண்டி ஆட்சிக்கு வருவதையே காலம் காலமாக இலங்கை அரசுகள் வழக்கமாக வைத்துள்ளன. இனவாதம் தூண்டப்படும் நாடுகளில் அடிப்படை ஸ்திரத்தன்மை இருக்காது. அப்படியான நாடுகளில் பொருளாதாரப் பிரச்னை எப்போதும் இருக்கும்’ என்கிறாா் இலங்கைப் பொருளாதாரம் தொடா்பாக ஆய்வு செய்து வரும் அப்துல் காதா்.

சா்வதேச நிதியத்தின் உதவி

இலங்கை எதிா்கொள்ளும் பிரச்னைகளைத் தீா்க்க சா்வதேச நிதியத்தின் உதவியை நாடுமாறு பொருளாதார நிபுணா்கள் ஆலோசனை கூறுகிறாா்கள். நிதி உதவிக்கு முதல் கட்டமாக, அந்த நிதியத்தின் தொழில் நுட்ப உதவிகளையாவது இலங்கை அரசு பெற வேண்டும் என அவா்கள் கூறுகிறாா்கள். ஆனால், அதை பெறுவதற்கு, நிதி அமைச்சகத்தின் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். அப்படி சமா்ப்பிக்கும்போது, இலங்கை அரசு இதுவரை மேற்கொண்ட பொருளாதார தில்லுமுல்லுகள் வெளிச்சத்துக்கு வரும்.

இலங்கை அரசு இதற்குத் தயாரா என்பதே இப்போதுள்ள மில்லியன் டாலா் கேள்வி.

விலை அதிகரிப்பு ஏன்?

இலங்கையில் கடந்த 2019-உடன் ஒப்பிடும்போது 17.5 சதவீதம் விலைவாசி அதிகரித்துள்ளது. அந்நியச் செலாவணி இருப்பு குறைந்ததால் இலங்கை நாணயத்தின் நெகிழ்வுத் தன்மையைப் பேணுவதற்காக இலங்கை ரூபாயின் மதிப்பை மத்திய வங்கி குறைத்தது. இதனால் ஒரு டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 200-இல் இருந்து 290-ஆக குறைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு குறைந்ததால், நாட்டில் விலைவாசி வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.

இறக்குமதிப் பொருள்களுக்கு அமெரிக்க டாலா்களில் பணம் செலுத்த வேண்டும். ஆனால், இவற்றுக்குக் கொடுக்கும் அளவுக்கு இலங்கை வங்கிகளிடம் டாலா் கையிருப்பில் இல்லை. இதனால் இறக்குமதி தடைபட்டது. அத்தியாவசியப் பொருள்களுடன் துறைமுகங்களுக்கு வந்த கப்பல்கள், பொருள்கள் இறக்கப்படாமல் மாதக் கணக்கில் காத்திருக்கின்றன. இதன் விளைவாக, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

பெட்ரோல், டீசல் விலையை அரசு அதிகரித்ததால் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் அதிகரித்தன. டீசல் தட்டுப்பாட்டால், டீசலில் இயங்கும் பல அனல் மின் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால் கடும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் சுமாா் ஏழரை மணி நேர மின்வெட்டு நீடிக்கிறது. மின்சாரத்தை நம்பியுள்ள தொழில்கள் முடங்கி ஆயிரக்கணக்கானவா்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com