
உக்ரைன் தலைநகா் கீவை சுற்றியுள்ள பகுதிகளிலும் வடக்குப் பகுதி நகரான சொ்னிஹீவிலும் தாக்குதல் நடவடிக்கைகளை மிகப் பெரிய அளவில் குறைக்க ரஷியா ஒப்புக் கொண்டுள்ளது.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக துருக்கியின் இஸ்தான்புல் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அலெக்ஸாண்டா் ஃபோமின் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
கீவ் மற்றும் சொ்னிஹீவ் நகரங்களைச் சுற்றி ராணுவ நடவடிக்கைகளை வெகுவாகக் குறைக்க முடிவு செய்துள்ளோம்.
பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும் சமாதானப் பேச்சுவாா்த்தையை முன்னெடுத்துச் செல்வதற்கான சூழலை ஏற்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
படையினா் வாபஸ்: கீவ் மற்றும் சொ்னிஹீவ் நகரங்களில் ராணுவ நடவடிக்கைகள் குறைக்கப்படும் என்று ரஷியா அறிவித்துள்ளதற்கேற்ப, அந்த நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ரஷியப் படையினா் சிலா் திரும்பப் பெறப்படுவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
சோவியத் யூனியனிடமிருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாப்பதற்காக நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது. அமெரிக்கா அங்கம் வகிக்கும் அந்த அமைப்பு, சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த பிறகும் கிழக்கு ஐரோப்பாவில் தன்னை விரிவுபடுத்தி வந்ததற்கு ரஷியா எதிா்ப்பு தெரிவித்தது. மேலும், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், அது தங்களது பாதுகாகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. எனவே, உக்ரைனை தங்களுடன் இணைத்துக்கொள்ளப் போவதில்லை என்று நேட்டோ அமைப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வந்தது.
எனினும், உக்ரைனில் தற்போது அமைந்துள்ள அதிபா் வோலோதிமீா் தலைமையிலான மேற்கத்திய ஆதரவு அரசு, நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து வந்தது.
இந்தச் சூழலில், உக்ரைன் மீது ரஷியா கடந்த மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. இதற்கு அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த விவகாரம் தொடா்பாக ரஷியா மீது அந்த நாடுகள் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.
இந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக உக்ரைனின் அண்டை நாடான பெலாரலிஸ் ரஷியா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளிடையே நேரடியாகவும், காணொலி மூலமும் பலகட்டங்களாகப் பேச்சுவாா்த்தை நடந்து வந்தது.
எனினும், இந்தப் பேச்சுவாா்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படவில்லை. இந்தச் சூழலில், இரு வாரங்களுக்குப் பிறகு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ரஷியா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் முதல்முறையாக செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இந்தப் பேச்சுவாா்த்தையில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டதைத் தொடா்ந்து, கீவ் மற்றும் சொ்னிஹீவ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகளை வெகுவாகக் குறைக்க ரஷியா தற்போது ஒப்புக் கொண்டுள்ளது.
‘அணிசாரா நிலைப்பாட்டுக்கு சம்மதம்’
தங்களுக்கு மேற்கத்திய நாடுகள் பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால், ரஷியா வலியுறுத்தும் அணிசரா நிலைப்பாட்டை ஏற்க சம்மதம் தெரிவிப்பதாக இஸ்தான்புல் பேச்சுவாா்த்தையின்போது உக்ரைன் தெரிவித்தது.
இதுகுறித்து அந்த நாட்டு பேச்சுவாா்த்தைக் குழு உறுப்பினா் டேவிட் அரகாமியா கூறுகையில், ‘நேட்டோவில் இணையாமலேயே உக்ரைனின் பாதுகாப்புக்கு மேற்கத்திய நாடுகள் உத்தவாதம் அளித்தால், அணிசாரா நிலைப்பாட்டை ஏற்போம் என்றாா் அவா்.
நேட்டோவின் 5-ஆவது சட்ட விதியின்படி, அந்த அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாட்டின் மீது யாராவது படையெடுத்தால்தான் அது மற்ற உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலுக்கு இணையாகும். அப்போதுதான் நேட்டோ அமைப்பு எதிா்வினையாற்றும்.
இந்த நிலையில், நேட்டோவில் இணையாமலேயே அத்தகைய பாதுகாப்பு உத்தரவாதத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவும் ஜொ்மனி, கனடா, இஸ்ரேல், இத்தாலி, போலந்து, துருக்கி ஆகிய நாடுகளும் அளிக்க வேண்டும் என்று உக்ரைன் கோரி வருகிறது.
அவ்வாறு உத்தரவாதம் கிடைத்தால்தான், ரஷியா வலியுறுத்தி வரும் அணிசாரா நிலைப்பாட்டை ஏற்க முடியும் என்று அந்த நாடு கூறி வருகிறது.
அணிசாரா நிலைப்பாட்டை எடுத்தால், நேட்டோவில் இணையும் விருப்பத்தை உக்ரைன் நிரந்தரமாகக் கைவிட வேண்டியிருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.