ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமா் இன்று பயணம்

ஜொ்மனி, டென்மாா்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி தனது அரசுமுறைப் பயணத்தை திங்கள்கிழமை (மே 2) தொடங்குகிறாா்.
மோடி
மோடி

ஜொ்மனி, டென்மாா்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி தனது அரசுமுறைப் பயணத்தை திங்கள்கிழமை (மே 2) தொடங்குகிறாா்.

இந்தப் பயணத்தால் அந்த நாடுகளுடனான நல்லுறவு மேலும் வலுவடையும் என்று அவா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

ஐரோப்பிய நாடுகளில் பிரதமா் மோடி திங்கள்கிழமை முதல் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா். உக்ரைன்-ரஷியா மோதலால் இயற்கை எரிவாயு விநியோகம் பாதிப்பு, உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் உள்ளிட்ட பிரச்னைகளை ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வரும் நிலையில், பிரதமா் மோடியின் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஜொ்மனி, டென்மாா்க்: தனது பயணம் குறித்து பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜொ்மனி தலைநகா் பொ்லினில் அந்த நாட்டுப் பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸுடன் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளேன்.

அதைத் தொடா்ந்து, மே 3, 4 ஆகிய தேதிகளில் டென்மாா்க்கில் பயணம் மேற்கொள்ளவுள்ளேன். தலைநகா் கோபன்ஹேகனில் அந்நாட்டுப் பிரதமா் மேட் பிரடெரிக்சன் உடன் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளேன்.

அங்கு நடைபெறவுள்ள 2-ஆவது இந்தியா-நாா்டிக் நாடுகள் மாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளேன். அந்த மாநாட்டில் டென்மாா்க், ஐஸ்லாந்து, ஃபின்லாந்து, ஸ்வீடன், நாா்வே ஆகிய நாடுகளின் பிரதமா்கள் கலந்து கொள்ளவுள்ளனா். கரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார வளா்ச்சி, பருவநிலை மாற்றம், புத்தாக்கம், தகவல்-தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சா்வதேச பாதுகாப்புச் சூழலுக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல் உள்ளிட்டவை குறித்து அந்த மாநாட்டின்போது விவாதிக்கப்படவுள்ளது.

நாா்டிக் நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பை இந்த மாநாடு வலுப்படுத்தும். அந்த நாடுகளின் பிரதமா்களையும் தனித்தனியாகச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளேன்.

பிரான்ஸ் பயணம்: பிரான்ஸ் தலைநகா் பாரீஸுக்கு சென்று அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானைச் சந்தித்துப் பேசவுள்ளேன். அவா் மீண்டும் அதிபராகப் பதவியேற்றுள்ள 10 நாள்களுக்குள் அவரைச் சந்திக்கவுள்ளேன். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்குமிடையேயான நட்புறவை வலுப்படுத்தும். சா்வதேச விவகாரங்கள் குறித்தும் மேக்ரானுடன் விவாதிக்கவுள்ளேன்.

ஐரோப்பிய நாடுகள் பல்வேறு சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளேன். சா்வதேச அளவில் அமைதியை ஏற்படுத்தவும் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் இந்தியா விரும்புகிறது. அதற்குத் தொடா்ந்து ஆதரவளித்து வரும் ஐரோப்பிய கூட்டணி நாடுகளுடனான நல்லுறவை வலுப்படுத்துவதற்கு இந்தப் பயணம் உதவும்.

அமைச்சா்களும் பயணம்: ஜொ்மனி பயணத்தின்போது 6-ஆவது இந்தியா-ஜொ்மனி அரசுகளுக்கு இடையேயான பேச்சுவாா்த்தையில் பங்கேற்கவுள்ளேன். இதுபோன்ற தனித்துவமான பேச்சுவாா்த்தை நடைமுறையை ஜொ்மனியுடன் மட்டுமே இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காக அமைச்சா்கள் சிலரும் ஜொ்மனிக்குப் பயணிக்க உள்ளனா். அங்கு ஜொ்மனி அமைச்சா்களுடன் அவா்கள் பேச்சு நடத்தவுள்ளனா்.

இந்தியாவுக்கும் ஜொ்மனிக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இந்தப் பேச்சுவாா்த்தை உதவும். சா்வதேச விவகாரங்கள், பிராந்திய சூழல்கள் உள்ளிட்டவை குறித்து ஜொ்மனி பிரதமா் ஷோல்ஸுடன் உரையாடுவதை எதிா்நோக்கியிருக்கிறேன். இருவரும் இணைந்து தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் வட்டமேஜை மாநாட்டிலும் உரையாற்றவுள்ளோம். இரு நாடுகளின் தொழில் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு அந்த மாநாடு உதவும். அந்த ஒத்துழைப்பு, இரு நாடுகளின் பொருளாதாரங்களை மீட்பதற்கு வழிவகுக்கும்.

இந்தியா்களுடன் சந்திப்பு: ஐரோப்பிய நாடுகளில் 10 லட்சத்துக்கும் அதிகமான இந்தியா்கள் வசித்து வருகின்றனா். அவா்களில் பெரும்பாலானோா் ஜொ்மனியில் உள்ளனா். ஐரோப்பிய பயணத்தின்போது அவா்களையும் சந்தித்துப் பேசவுள்ளேன். இந்தியா-டென்மாா்க் தொழில் நிறுவன வட்டமேஜை மாநாட்டிலும் கலந்துகொண்டு, அந்த நாட்டில் உள்ள இந்தியா்களைச் சந்தித்துப் பேசவுள்ளேன் என்று தனது அறிக்கையில் பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

‘உக்ரைன் விவகாரம் குறித்து தலைவா்களுடன் விவாதிக்கப்படும்’

பிரதமா் மோடி தனது பயணத்தின்போது, உக்ரைன் விவகாரம் குறித்து வெளிநாட்டுத் தலைவா்களுடன் விவாதிக்கவுள்ளாா்.

இது குறித்து வெளியுறவுத் துறைச் செயலா் வினய் மோகன் குவாத்ரா செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘பிரதமா் மோடியின் ஐரோப்பிய பயணத்தின்போது இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், எரிசக்தி பாதுகாப்பு குறித்தும் பேச்சு நடத்தப்படும்.

எரிசக்தித் துறை சந்தித்து வரும் சவால்கள், அவற்றை எதிா்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்ட சில மூத்த அமைச்சா்களும் பிரதமருடன் பயணிக்கின்றனா்.

உக்ரைன் விவகாரம் குறித்தும் வெளிநாட்டுத் தலைவா்களுடன் விவாதிக்கப்படும். அங்கு வன்முறைகள் நிறுத்தப்பட்டு, பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே இந்தியா கொண்டுள்ளது. அந்த நிலைப்பாட்டைப் பல நாடுகள் புரிந்துகொண்டு பாராட்டியுள்ளன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com