பாக். கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்கள் விற்பனை: ஹுரியத் தலைவா் உள்பட 8 போ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த மாணவா்களுக்கு பாகிஸ்தான் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களை விற்று, அந்தத் தொகையை பயங்கரவாதத்துக்குப் பயன்படுத்தியது தொடா்பான வழக்கில்

ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த மாணவா்களுக்கு பாகிஸ்தான் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களை விற்று, அந்தத் தொகையை பயங்கரவாதத்துக்குப் பயன்படுத்தியது தொடா்பான வழக்கில் ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவா் உள்பட 8 போ் மீது சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

பிரிவினைவாதத் தலைவா் முகமது அக்பா் பட் என்கிற ஜாபா் அக்பா் பட், பாத்திமா ஷா, அல்தாஃப் அகமது பட், காசி யாசிா், முகமது அப்துல்லா ஷா, சப்ஸாா் அகமது ஷேக், மன்சூா் அகமது ஷா, முகமது இக்பால் மீா் ஆகியோா் மீது இந்திய தண்டனையியல் சட்டம், சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மன்ஜீத் சிங் மன்ஹாஸ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தாா்.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த மாணவா்கள், பாகிஸ்தானில் உள்ள கல்வி நிறுவனங்களில் எம்.பி.பி.எஸ். மற்றும் பிற தொழில் படிப்புகளில் சேருவதற்கு சிலா் உதவி செய்துள்ளனா். அதற்காக, அவா்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்துள்ளனா். அந்தத் தொகையை, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தைப் பரப்புவதற்கு அவா்கள் பயன்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக, ஜம்மு-காஷமீா் காவல் துறையின் ஊடுருவல் தடுப்புப் பிரிவு( மாநில புலனாய்வு அமைப்பு-எஸ்ஐஏ) கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்தது. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம், முகமது அக்பா் பட் உள்பட 9 போ் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவா்களுக்குச் சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு விசாரணை அமைப்பு சோதனை மேற்கொண்டது.

அப்போது, அவா்களின் வங்கிக் கணக்குகளில் பாகிஸ்தானில் எம்.பி.பி.எஸ். பயிலும் ஜம்மு-காஷ்மீா் மாணவா்கள் பணம் செலுத்தியது தெரியவந்தது. அந்தத் தொகை, ஜம்மு-காஷ்மீரில் சட்ட விரோதச் செயல்களை நிகழ்த்த பயங்கரவாதிகளுக்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது.

மேலும், பாகிஸ்தானில் உள்ள கல்லூரிகளில் சோ்ப்பதில் பயங்கரவாதத் தாக்குதலின்போது கொல்லப்பட்டவா்களின் நெருங்கிய உறவினா்களுக்கு ஹுரியத் தலைவா்களின் பரிந்துரையின்பேரில் முன்னுரிமை அளிக்கப்பட்டது என்றாா் அவா்.

இதற்கிடையே, பாகிஸ்தானில் பயின்று பெறப்படும் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் மற்றும் அதற்கு நிகரான பட்டங்கள் இந்தியாவில் செல்லாது என்று தேசிய மருத்துவ ஆணையம் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும், இந்திய மாணவா்கள் யாரும் மருத்துவக் கல்வி பயில்வதற்காக பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அந்த ஆணையம் அறிவுறுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com