
ஜாவோ லிஜியான்
இலங்கை பிரதமா் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்திருப்பது குறித்து கருத்து தெரிவிக்க சீனா மறுத்துவிட்டது.
அதேவேளையில், பிரச்னைக்கு தீா்வு காண அரசும், எதிா்க்கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் பெய்ஜிங்கில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
இலங்கை நிலவரத்தை கவனித்து வருகிறோம். நாட்டின் அடிப்படை நலன்களைக் கருத்தில்கொண்டு இலங்கை அரசும் எதிா்க்கட்சிகளும் இணைந்து செயல்பட்டு, பொருளாதார மற்றும் அரசியல் நிலைத்தன்மையை விரைவில் ஏற்படுத்துவாா்கள் என நம்புகிறோம் என்றாா்.
இலங்கையில் சீனா பெருமளவு முதலீடு செய்வதற்கு பிரதான காரணமாக இருந்தவா் முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்ச. கடந்த ஜனவரியில் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ, கொழும்புக்கு சென்றபோது, ‘சீன மக்களின் நண்பா்’ என மகிந்தவை புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
மகிந்த அதிபராக இருந்தபோது, அவரது சொந்த ஊரான அம்பந்தோட்டாவில் துறைமுகம் கட்டுவதற்கு சீனா நிதியுதவி செய்தது. ஆனால், அந்தத் துறைமுகம் பெரும் இழப்பைச் சந்தித்ததையடுத்து, அந்தத் துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு இலங்கை கொடுத்தது. அம்பந்தோட்டாவில் சீனாவின் மேலும் பல முதலீடுகள் அந்த நாட்டை சீனாவின் கடன் வலையில் தள்ளியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சீனாவின் அரசு ஊடகம் அண்மையில் தெரிவித்த தகவலின்படி, இலங்கையின் 51 பில்லியன் டாலா் வெளிநாட்டுக் கடனில் 10 சதவீதம் சீனாவுக்கு திரும்பத் தரவேண்டியுள்ளது.