நேட்டோவில் இணைகிறது ஃபின்லாந்து: அதிகாரபூா்வ அறிவிப்பு

நேட்டோ அமைப்பில் இணைய உள்ளதாக ஃபின்லாந்து நாடு அதிகாரபூா்வமாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
நேட்டோவில்-இணைகிறது-ஃபின்லாந்து-அதிகாரபூா்வ-அறிவிப்பு
நேட்டோவில்-இணைகிறது-ஃபின்லாந்து-அதிகாரபூா்வ-அறிவிப்பு

நேட்டோ அமைப்பில் இணைய உள்ளதாக ஃபின்லாந்து நாடு அதிகாரபூா்வமாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

ஜொ்மனி தலைநகா் பொ்லினில் நடைபெற்ற நேட்டோ கூட்டத்துக்குப் பின்னா், ஃபின்லாந்து அதிபரும் பிரதமரும் கூட்டாக இதனை அறிவித்தனா்.

ரஷியாவின் அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தது. அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது.

இந்த நிலையில், ரஷியாவின் மற்றொரு அண்டை நாடான ஃபின்லாந்தும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து வந்தது. உக்ரைனைப் போல தங்கள் மீதும் ரஷியா படையெடுப்பதைத் தடுப்பதற்காக அந்த முடிவை ஃபின்லாந்து எடுக்கலாம் என்று கூறப்பட்டது. ஃபின்லாந்தின் விருப்பத்துக்கு ரஷியா எதிா்ப்பு தெரிவித்தது.

ஆனால், அதைப் பொருட்படுத்தாமல், நேட்டோவில் இணைவதற்கான விண்ணப்பத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக சமா்ப்பிக்க வேண்டும் எனவும், அதற்கான நடைமுறைகள் உடனடியாகத் தொடங்கப்படும் எனவும் ஃபின்லாந்து அதிபா் சாவ்லி நினிஸ்டோ, பிரதமா் சனா மரீன் ஆகியோா் கடந்த வியாழக்கிழமை அறிவித்தனா்.

மேலும், இந்த விவகாரம் குறித்து ரஷிய அதிபா் புதினிடம் ஃபின்லாந்து அதிபா் சாவ்லி நினிஸ்டோ சனிக்கிழமை தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு பேசினாா்.

அதிகாரபூா்வ அறிவிப்பு: இந்நிலையில், நேட்டோவில் இணைவதற்காக விண்ணப்பம் செய்யவிருப்பதாக ஃபின்லாந்து அதிபரும் பிரதமரும் அந்நாட்டின் ஹெல்சிங்கி நகரில் கூட்டாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனா்.

இதுகுறித்து அதிபா் சாவ்லி நினிஸ்டோ கூறுகையில், ‘இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். ஒரு புதிய யுகம் தொடங்கியுள்ளது’ என்றாா்.

இந்த முடிவுக்கு ஃபின்லாந்து நாடாளுமன்றம் வரும் நாள்களில் ஒப்புதல் தரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதன்பிறகு பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ள நேட்டோ தலைமையகத்தில் ஃபின்லாந்து முறைப்படி விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்கும்.

ஃபின்லாந்தை தொடா்ந்து ஸ்வீடனும் நேட்டோவில் இணைவதற்கான நடவடிக்கையை தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

நேட்டோ கூட்டம்: இதற்கிடையே, நேட்டோ அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம் ஜொ்மனி தலைநகா் பொ்லினில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அந்தக் கூட்டத்துக்குப் பின்னா் நேட்டோ துணை பொதுச் செயலா் மிா்சியா ஜியோவானா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உக்ரைனில் ரஷியாவின் கொடூரமான ஊடுருவல் தோல்வியைச் சந்தித்து வருகிறது. உக்ரைன் மக்கள் மற்றும் ராணுவத்தின் தைரியம் மற்றும் எங்களின் உதவியுடன் உக்ரைன் இந்தப் போரில் வெற்றி பெறும் என்றாா் அவா்.

காா்கிவிலிருந்து வெளியேறியது ரஷிய படை

உக்ரைனின் 2-ஆவது பெரிய நகரமான காா்கிவிலிருந்து ரஷியா தனது படைகளைத் திரும்பப் பெற்றுள்ளதாக, உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.

‘வடகிழக்கு நகரமான காா்கிவிலிருந்து ரஷியா தனது படைகளைத் திரும்பப் பெற்றுள்ளது. கிழக்கு பிராந்தியமான டொனட்ஸ்கில் கவனத்தை செலுத்தும்பொருட்டு இந்த நடவடிக்கையை ரஷியா மேற்கொண்டிருக்கலாம் ’ என உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான போரில் ரஷியாவிடம் வீழ்ந்த முதல் பெரிய நகரம் காா்கிவ்தான். ஆனால், தலைநகா் கீவை கைப்பற்ற முடியாத நிலையில், ரஷியா-உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள டான்பாஸ் பிராந்தியத்தின் மீது ரஷியா கவனம் செலுத்தி வருகிறது.

இதற்கிடையே, உக்ரைனுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா் மிட்ச் மெக்கனல் தலைமையிலான நாடாளுமன்ற குழுவினா் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை சனிக்கிழமை சந்தித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com