
கோப்புப்படம்
ஆப்கானிஸ்தானில் பெண் செய்தியாளர்கள் செய்தி வாசிக்கும்போது தங்கள் முகத்தை முழுவதுமாக மூடியிருக்க வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பெண்கள் தலை முதல் கால் வரை மறைக்கக்கூடிய பர்தா அணிய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றும் பெண்களும் பர்தா அல்லது ஹிஜாப் அணிய வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் அபையின் உதவிக்குழுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் இனி கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த நிலையில்தான் ஊடகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், பெண் செய்தியாளர்கள் செய்தி வாசிக்கும்போது முகத்தை முழுவதுமாக மறைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதுபோன்று பெண்கள் கல்வி பயிலக் கூடாது, வெளியிடங்களுக்கு தனியே பயணிக்கக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.