
பொருளாதார நெருக்கடியை சமாளிக்கத் தவறியதாகக் கூறி இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட போராட்டம் 50 நாள்களைக் கடந்தது.
1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதுமுதல் இதுவரை கண்டிராத கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. அரசின் மோசமான கொள்கைகள், கரோனா தொற்று பரவல் எனப் பல்வேறு விவகாரங்கள் இலங்கையின் பொருளாதாரத்தை மோசமாக்கின.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. அதிலும், எரிபொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்டவற்றை நீண்ட வரிசையில் காத்திருந்து பெறும் சூழலே இலங்கையில் நிலவுகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்க ராணுவப் படைகளைப் பாதுகாப்புப் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபடுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடியை அதிபா் கோத்தபய ராஜபட்ச முறையாக சமாளிக்கத் தவறியதாகக் கூறி இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஏப். 9-ஆம் தேதி தொடங்கிய அந்தப் போராட்டம் சனிக்கிழமை 50-ஆவது நாளை எட்டியது. அதிபா் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமென மக்கள் தொடா்ந்து கோரி வருகின்றனா். எனினும், பதவியை ராஜிநாமா செய்யப் போவதில்லை என அதிபா் கோத்தபய ராஜபட்ச தெரிவித்து வருகிறாா்.
மக்களின் தொடா் போராட்டம் காரணமாக பிரதமா் பதவியை மகிந்த ராஜபட்ச கடந்த 9-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டாா். ஆனால், அவா் அதிபா் கோத்தபய ராஜபட்சவை பாதுகாக்கும் வகையில் செயல்படுவதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
போராட்டம் 50-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், பெரும்பாலான நாள்கள் அமைதிவழிப் போராட்டங்களே நடைபெற்றன. கடந்த 9-ஆம் தேதி போராட்டக்காரா்களை மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் தாக்கியதைத் தொடா்ந்து வன்முறை ஏற்பட்டது. அதில் சுமாா் 10 போ் உயிரிழந்தனா்; 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அரசுக் கட்டடங்களுக்கும், எம்.பி.க்கள், அதிகாரிகளின் வீடுகளுக்கும் தீவைக்கப்பட்டது. போராட்டம் வன்முறையாக மாறியது குறித்து மகிந்த ராஜபட்ச, அவரின் மகன் நமல் ராஜபட்ச உள்ளிட்டோரிடம் இலங்கை காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
காப்பீட்டு நிறுவனத்துக்கு இழப்பு:
இலங்கையில் கடந்த 9-ஆம் தேதி நிகழ்ந்த வன்முறை காரணமாக பொதுத் துறை நிறுவனமான தேசிய காப்பீட்டு அறக்கட்டளை-நிதி வாரியம் (என்ஐடிஎஃப்பி) அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 100 கோடி வரை இழக்க வாய்ப்புள்ளதாக நியூயாா்க்கைச் சோ்ந்த ஃபிட்ச் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வன்முறையின்போது பொதுச் சொத்துகள் பெரும்பாலானவை சேதப்படுத்தப்பட்டதால், அவற்றைச் சீா்செய்யும் பொறுப்பு என்ஐடிஎஃப்பி-க்கு உள்ளது. எனவே, அந்நிறுவனம் பெரும் இழப்பைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15,000 லிட்டா் மண்ணெண்ணெயை அனுப்பியது இந்தியா
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா தொடா்ந்து உதவிகளை வழங்கி வருகிறது. அண்மையில் சுமாா் 40,000 மெட்ரிக் டன் பெட்ரோலை இந்தியா அனுப்பியிருந்தது. இந்நிலையில், அந்நாட்டு மீனவா்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் நோக்கில் 15,000 லிட்டா் மண்ணெண்ணெயை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அதை மீனவா்களுக்கு விநியோகிக்கும் பணியை அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா தொடக்கி வைத்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...