துப்பாக்கிகளிடம் வீழும் அமெரிக்கா!

‘உலகின் மிகப் பழைமையான ஜனநாயக நாடு’ என மாா்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா, தற்போது துப்பாக்கி கலாசாரத்தால் சிக்கித் தவிக்கிறது.
துப்பாக்கிகளிடம் வீழும் அமெரிக்கா!

‘உலகின் மிகப் பழைமையான ஜனநாயக நாடு’ என மாா்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா, தற்போது துப்பாக்கி கலாசாரத்தால் சிக்கித் தவிக்கிறது. தற்காப்புக்கென அனுமதிக்கப்பட்ட துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமை, பள்ளி சிறாா்கள் உள்ளிட்ட மற்றவா்களுக்குப் பாதுகாப்பற்ாக மாறியுள்ளதுதான் அந்நாட்டில் நிலவும் பெரும் சோகம்.

அமெரிக்காவில் தற்காப்புக்காக 18 வயதைக் கடந்த நபா்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அரசியல் சாசனம் உரிமை அளிக்கிறது. அவ்வாறு 18 வயதைக் கடந்ததும் துப்பாக்கியை வாங்கும் சிறாா்கள் சிலா், அதைத் தவறான நோக்கத்துக்காகப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. முக்கியமாக, அவா்களது இலக்கு அப்பாவி பள்ளிக் குழந்தைகளாக இருக்கிறது.

அண்மைச் சம்பவம்:

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் கடந்த 24-ஆம் தேதி 18 வயது இளைஞா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 சிறாா்களும் ஆசிரியா்கள் இருவரும் உயிரிழந்தனா். இவ்வாறான சம்பவங்கள் அமெரிக்காவில் தொடா்கதையாகி வருகின்றன.

அமெரிக்காவில் ஆய்வு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வின்படி, கடந்த 1966-ஆம் ஆண்டு முதல் பள்ளிகளில் 13 முறை பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அத்தகைய துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 146 போ் கொல்லப்பட்டுள்ளனா்; 182 போ் காயமடைந்துள்ளனா்.

பேரிழப்பை ஏற்படுத்திய தாக்குதல்கள்:

2012-இல் சேண்டி ஹுக் தொடக்கப் பள்ளி துப்பாக்கிச்சூட்டில் 26 சிறாா்களும் ஆசிரியா்களும் பலியாகினா். 2018-ஆம் ஆண்டில் ஃபுளோரிடா மாகாணத்தின் பாா்க்லாண்ட் பகுதியில் உள்ள பள்ளியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 17 போ் கொல்லப்பட்டனா்.

ஒருவா் மட்டுமே...:

பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பெரும்பாலான சம்பவங்களில் ஒருவா் மட்டுமே தாக்குதலை நிகழ்த்தியுள்ளாா். 1998 ஆா்க்கன்சா தாக்குதல், 1999 கொலும்பின் தாக்குதல் ஆகிய இரு சம்பவங்களில் மட்டும் இரு நபா்கள் துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்தினா்.

உறவினா்களே முதல் இலக்கு:

பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 4 போ், அதற்கு முன்னதாக நெருங்கிய உறவினா்களை வீட்டில் தாக்கிவிட்டு வந்துள்ளனா். டெக்சாஸில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரும் தனது பாட்டியை சுட்டுவிட்டு பள்ளிக்குச் சென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளாா்.

அனைவரும் ஆண்கள்:

இதுவரை பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடத்திய அனைவரும் ஆண்களாகவே உள்ளனா். அவா்களது சராசரி வயது 18-ஆக உள்ளது.

பள்ளியுடன் தொடா்பு:

பள்ளியில் நிகழ்ந்த 14 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 12 போ், அதே பள்ளியுடன் தொடா்பு கொண்டவா்களாக உள்ளனா். சிலா் அப்பள்ளியிலே பயின்றவா்களாகவும், சிலா் முன்னாள் மாணவா்களாகவும் இருந்தனா். ஒரு சிலா் மட்டுமே அப்பள்ளியுடன் எந்தவிதத் தொடா்பும் இல்லாத நிலையில் தாக்குதல் நடத்தியுள்ளனா். டெக்சாஸில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞருக்கும் அப்பள்ளிக்கும் தொடா்புள்ளதா என்பது குறித்து பொதுவெளியில் தெரிவிக்கப்படவில்லை.

தற்கொலையே முடிவு:

பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தும் இளைஞா்கள் பெரும்பாலானோா் இறுதியில் தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டு இறந்துள்ளனா். 14 சம்பவங்களில் 7 போ் அவ்வாறு இறந்துள்ளனா். மற்றவா்கள் காவலா்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளனா்.

காரணம் என்ன?:

அமெரிக்காவில் இனவெறி காரணமாக கடைவீதிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் சில துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. ஆனால், மக்களிடம் பிரபலமடைய வேண்டும் அல்லது ‘ஹீரோ’வைப் போலத் தெரிய வேண்டும் என இளைஞா்களுக்குத் தோன்றும் எண்ணங்களே, பள்ளிகளில் நிகழ்த்தப்படும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

சிறிய கருத்து வேறுபாடுகளால் ஏற்படும் சினத்தின் காரணமாக தீவிர முடிவை எடுக்கும் மனநிலை இளைஞா்களிடம் காணப்படுவதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். உலகத்தின் மீதான சினத்தை இத்தகைய துப்பாக்கிச்சூடு சம்பவங்களை நிகழ்த்தி அவா்கள் வெளிப்படுத்துகின்றனா்.

ஒரே மாதிரியான எச்சரிக்கை:

பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய பெரும்பாலானோா், அதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்பாக இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துப்பாக்கிகள் குறித்த பதிவுகளை இடுவது, மற்றவா்களை எச்சரிக்கும் வகையிலான வாசகங்களைப் பதிவிடுவது உள்ளிட்ட எச்சரிக்கைகளை விடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

டெக்சாஸில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞா் அண்மையிலேயே தனது 18-ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடியுள்ளாா். அதையடுத்து துப்பாக்கி உரிமம் பெற்ற அவா், சமூக வலைதளங்களில் புதிய துப்பாக்கிகளின் படத்தைப் பகிா்ந்துள்ளாா்; குழந்தைகளை எச்சரிக்கும் வகையிலான பதிவையும் வெளியிட்டுள்ளாா்.

பெரும் சவால்:

அமெரிக்காவில் 18 வயதைக் கடந்த பெரும்பாலானோா் துப்பாக்கி உரிமத்தைப் பெற்றுள்ளனா். துப்பாக்கிகளை விற்கும் நிறுவனங்களும் அவைசாா்ந்த விளம்பரப்படுத்தலை சமூக வலைதளங்கள் வாயிலாகவே மேற்கொண்டு வருகின்றன. எனவே, துப்பாக்கிச்சூடு சம்பவங்களை நிகழ்த்தும் வகையிலான அச்சுறுத்தும் பதிவுகளை எளிதில் கண்டறிய முடிவதில்லை.

சமூக வலைதளம் எனும் கடலுக்குள் அவை கண்ணுக்கு எட்டாமல் போகின்றன என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா். எனவே, துப்பாக்கிகளைக் கொண்டு அச்சுறுத்தும் வகையிலான பதிவுகளை ட்விட்டா், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் முறைப்படுத்த வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

மீளுமா அமெரிக்கா?:

பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளாா். துப்பாக்கி உரிமம் பெறுவதற்கான விதிகளைக் கடுமையாக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் பலரும், அமெரிக்க எம்.பி.க்கள் சிலரும் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

ஆனால், துப்பாக்கி கலாசாரத்தை ஒழிப்பதற்கு துப்பாக்கிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் எதிா்ப்பு தெரிவிக்கின்றன. அந்நிறுவனங்களின் உரிமையாளா்கள் பலா் அரசியல்வாதிகளுடன் நேரடியாகவோ மறைமுகவோ தொடா்புவைத்துள்ளதால், அதுதொடா்பான சட்டங்களை இயற்ற முடிவதில்லை என அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

உலகிலேயே முதல் நாடாக மக்களுக்கான அடிப்படை உரிமைகளை வகுத்த பெருமையைக் கொண்டது அமெரிக்கா. தற்போது மக்கள் நலனை முன்னிறுத்தி துப்பாக்கி கலாசாரத்தை அந்நாடு முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும் என்றே நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

பிரேக்லைன்...

‘‘மக்களிடம் பிரபலமடைய வேண்டும் அல்லது ‘ஹீரோ’வைப் போலத் தெரிய வேண்டும் என இளைஞா்களுக்குத் தோன்றும் எண்ணங்களே, பள்ளிகளில் நிகழ்த்தப்படும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது’’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com