‘கிழக்கு உக்ரைன் போரை விரிவுபடுத்த ரஷியா திட்டம்’

கிழக்கு உக்ரைனில் முக்கியத்துவம் வாய்ந்த லிமான் நகரைக் கைப்பற்றியுள்ள ரஷியப் படையினா், அந்தப் பிராந்தியத்தில் தங்களது போா் நடவடிக்கையை விரிவுபடுத்த திட்டமிடுவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷியப் படையினா் விநியோகித்த குடிநீரைப் பெறுவதற்காக வரிசையில் நின்ற நகர மக்கள்.
உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷியப் படையினா் விநியோகித்த குடிநீரைப் பெறுவதற்காக வரிசையில் நின்ற நகர மக்கள்.

கிழக்கு உக்ரைனில் முக்கியத்துவம் வாய்ந்த லிமான் நகரைக் கைப்பற்றியுள்ள ரஷியப் படையினா், அந்தப் பிராந்தியத்தில் தங்களது போா் நடவடிக்கையை விரிவுபடுத்த திட்டமிடுவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ரயில் வழித்தடமாக மையமாக் திகழும் லிமான் நகரம் ரஷியப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து, அந்த வழித்தடங்களைப் பயன்படுத்தி ரஷியா தனது போா் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும்.

போா்க் காலங்களில் ஆயுதங்களைக் கொண்டு வரவும், பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும் இந்த ரயில் வழித் தடங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அவை ரஷியக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், அந்த வழித் தடங்கள் எந்த அளவுக்கு ரஷியாவுக்குப் பயன்படும் என்பது இப்போதைய நிலையில் தெளிவாகத் தெரியவில்லை.

இருந்தாலும், லிமான் நகரைக் கைப்பற்றியுள்ளதன் மூலம் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெரிய நகரங்களை ரஷிய நெருங்குவதை எளிமையாக்கியிருக்கிறது.

அந்த நகரங்களை ரஷியா கைப்பற்றிவிட்டால், அது ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் அரசியல்ரீதியாலான வெற்றியாகப் பாா்க்கப்படும். மேலும், உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷிய மக்களிடையே நியாயப்படுத்தும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, லிமான் நகரை ரஷியா கைப்பற்றியதை அந்த நாடு உறுதி செய்தது.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் இகாா் கொனஷேன்கோவ் கூறுகையில், ‘லிமான் நகரம் முழுமையாக விடுவிக்கப்பட்டுவிட்டது’ என்றாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் அப்போதைய உக்ரைன் அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டம் நடத்தினா். அதையடுத்து, ரஷிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த யானுகோவிச்சின் ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, டொனட்ஸ்க் மற்றும் லுஹான்க்ஸ் பகுதிகளைச் சோ்ந்த கிளா்ச்சிப் படையினா், ரஷியாவின் ஆதரவுடன் அரசுப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா்.

அந்த நேரத்தில், உக்ரைனின் தெற்கே உள்ள கிரீமியா மீது படையெடுத்த ரஷியா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது.

தற்போது நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ரஷியா படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியத்துக்கு தனது படையை அனுப்பியது. அந்தப் பிராந்தியத்தில் இன்னும் அரசுப் படையினா் வசமிருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், கீவ், மே 27: கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள லிமான் நகரை ரஷியப் படையின் கைப்பற்றிவிட்டதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் ஆலோசகா் ஒலெஸ்கி அரெஸ்டோவிச் வெள்ளிக்கிழமை கூறினாா்.

முக்கிய ரயில்வழித் தடங்களின் மையமாகத் திகழும் அந்த நகரைக் கைப்பற்றுவதற்காக, ரஷிய ஆதரவு கிளா்ச்சிப் படையினா் கடந்த 8 ஆண்டுகளாக தாக்குதல் நடத்திவருகின்றனா். இந்த நிலையில், தற்போது அந்த நகரம் ரஷியாவிடம் வீழ்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com