அதிரவைக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்...கட்டுப்பாடுகள் வதிக்கப்படுமா? ஐடியா சொன்ன டிரம்ப்

தேசிய துப்பாக்கி கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப், "சட்டத்தை மதிக்கும் குடிமக்களுக்கு ஆயுதம் வழங்குவதற்கு மிக முக்கிய காரணம் தீய சக்திகளின் இருப்பு" என தெரிவித்தார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்

டெக்சாஸ் தொடக்க பள்ளி படுகொலை சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்காததன் காரணமாகவே இம்மாதிரியான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதற்கு மத்தியில், துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் சார்பில் அமெரிக்காவில் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், இதனை மறுத்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், "துப்பாக்கிகளை பயன்படுத்த ஒழுக்கமான அமெரிக்கர்களை அனுமதிக்க வேண்டும். தங்களை தானே அவர்கள் தீய சக்திகளுக்கு எதிராக பாதுகாத்து கொள்ள வேண்டும்" என்றார்.

தேசிய துப்பாக்கி கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப், "சட்டத்தை மதிக்கும் குடிமக்களிடமிருந்து ஆயுதங்களை பறிக்காமல் இருப்பதற்கு காரணம் தீய சக்திகளின் இருப்பு. சட்டத்தை மதிக்கும் குடிமக்களுக்கு ஆயுதம் வழங்குவதற்கு மிக முக்கிய காரணம் தீய சக்திகளின் இருப்பு. 

இடதுசாரிகள் கொண்டு வர நினைக்கும் துப்பாக்கி கட்டுப்பாட்டு விதிகளால் இம்மாதிரியான பயங்கர சம்பவங்களை தடுக்க முடிக்க முடியாது. முடியவே முடியாது" என்றார்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளியில் 18 வயதே நிரம்பிய ராமோஸ் என்ற நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் 19 குழந்தைகள், இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். இதில் கொல்லப்பட்ட 19 குழந்தைகளின் பெயரை வாசித்த டிரம்ப், கட்டுப்பாடற்ற பைத்தியக்காரனால் இவர்கள் பாதிக்கப்பட்டதாக கூறினார். ஆனால், துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் முயற்சிகள் 'கோரமானவை' என்றும் விமரிசித்தார்.

மேலும் பேசிய அவர், "மாநில அளவில் அரசின் அனைத்து மட்டங்களிலும் ஜனநாயகவாதிகள், குடியரசி கட்சியினர் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பள்ளிகளை இறுதியாக உறுதியாக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் பாதுகாப்பை மேலிருந்து கீழ் மட்டத்தில் மாற்றியமைக்க வேண்டும்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபாட் கலந்து கொள்ளவிருந்தார். ஆனால், படுகொலை சம்பவத்திற்கு பிறகு அவர் கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com