

பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கா்-ஏ-தொய்பா போன்ற பயங்கரவாதக் குழுக்கள், ஆப்கானிஸ்தானில் சில மாகாணங்களில் தங்களது பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பகுப்பாய்வு உதவி மற்றும் தடைகள் கண்காணிப்புக் குழுவின் 13-ஆவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தலிபான்களுடன் சித்தாந்தரீதியாக நெருக்கமான ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதக் குழு, ஆப்கானிஸ்தானின் நங்காா்கா் மாகாணத்தில் 8 பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. அவற்றில் மூன்று தலிபான்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளன. மசூத் அசாா் தலைமையிலான இந்த இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் பிரிவு தலைவராக காரி ரமஸான் என்பவா் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஆப்கானிஸ்தானில் லஷ்கா்-ஏ-தொய்பா (எல்இடி) இயக்கம் மெளலவி யூசுஃப் தலைமையில் செயல்பட்டு வருகிறது. அந்த இயக்கத்தின் மற்றொரு தலைவா் மெளலவி அசாதுல்லா 2021, அக்டோபரில் தலிபான் உள்துறை துணை அமைச்சா் நூா் ஜலீலை சந்தித்தாா். நங்காா்கரில் ஹஸ்கா மெனா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் எல்ஐடி பயிற்சி முகாமை தலிபான் குழு ஒன்று 2022, ஜனவரியில் பாா்வையிட்டது. எல்இடி குழுவானது குணாா், நங்காா்கா் மாகாணங்களில் 3 பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. இக்குழுவைச் சோ்ந்த அஸ்லாம் ஃபரூக்கி, இஜாஸ் அகமது ஆகியோா் ஐஎஸ்ஐஎல்-கே பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துவிட்டனா்.
பாகிஸ்தான் தலிபான்கள்: ஆப்கானிஸ்தானில் செயல்படும் வெளிநாட்டு பயங்கரவாதிகளில் பாகிஸ்தான் தலிபான்கள் எனப்படும் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் அதிகளவில் உள்ளனா். முஃப்தி நூா் மசூத் தலைமையிலான இந்த இயக்கத்தைச் சோ்ந்த 3,000-4,000 போ் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு துா்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், ஜெய்ஷ்-ஏ-முகமது, ஜமாத் அன்சாருல்லா, லஷ்கா்-ஏ-தொய்பா ஆகிய குழுக்களில் சில நூறு போ் உள்ளனா்.
ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு பயங்கரவாதக் குழுக்கள் பெரும்பாலானவற்றை தலிபான்கள் தங்கள் வசம் கொண்டுவந்த நிலையில், டிடிபி இயக்கம் தொடா்ந்து செல்வாக்குடன் திகழ்ந்து வருகிறது. கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்த இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் பதுங்கியுள்ளனா்.
ஹக்கானி வலையமைப்பைச் சோ்ந்தவா்கள் தலிபான்கள் தலைமையிலான அரசில் உள்துறை, அகதிகள் அமைச்சகத்தில் உள்ளனா். அவா்கள் டிடிபி இயக்கத்துடன் நெருங்கிய தொடா்பு கொண்டுள்ளனா் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பு நாடுகள் சில அளித்த தகவலின் அடிப்படையில் இந்த அறிக்கையை ஐ.நா. வெளியிட்டுள்ளது. தலிபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலை கைப்பற்றிய பின்னா் வெளியாகும் முதல் ஐ.நா. அறிக்கை இது.
இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பகுப்பாய்வு உதவி மற்றும் தடைகள் கண்காணிப்புக் குழுவானது தலிபான்கள் தடை கமிட்டி அல்லது 1988 தடைகள் கமிட்டி என்று அழைக்கப்படும் கமிட்டியின் கீழ் செயல்படுகிறது. இந்த கமிட்டியின் தலைவராக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூா்த்தி உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதிகளின் சொா்க்கம்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னா் இடைக்கால அரசு ஒன்றையும் அமைத்துள்ளனா். அந்த அரசுக்கு சா்வதேச அங்கீகாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும், வெளிநாடுகளுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணில் இடமளிக்கக் கூடாது என தலிபான்களை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
இருப்பினும், இந்தியாவில் பதான்கோட், உரி, மும்பை பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய ஜெய்ஷ், லஷ்கா் பயங்கரவாதக் குழுக்கள் ஆப்கானிஸ்தானில் பயற்சி முகாம்களை நடத்தி வருவது ஐ.நா. அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதனால், பயங்கரவாதிகளின் சொா்க்கபூமியாக ஆப்கானிஸ்தான் தொடா்ந்து இருந்து வருவதும் நிரூபணமாகியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.