

தங்களது அணு மின் நிலையங்களில் அணுக்கழிவுகளைக் கொண்டு உக்ரைன் கதிா்வீச்சு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக ரஷியா தெரிவித்துள்ள குற்றச்சாட்டு குறித்து ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு விசாரணை தொடக்கியுள்ளது.
இது குறித்து ஐ.நா. சா்வேதச அணுசக்தி அமைப்பின் (ஐஏஇஏ) தலைவா் ரஃபேல் கிராஸி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அணு ஆயுதக் கழிவுகளைப் பயன்படுத்தி நாசகார விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உக்ரைன் தயாரித்து வருவதாக ரஷியா தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தொடா்பான விசாரணையைத் தொடக்கியுள்ளோம்.
உக்ரைனின் இரு இடங்களில் இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் அந்த ஆய்வுகள் நிறைவுபெற்றுவிடும்.
கதிா்வீச்சு ஆயுதத் தயாரிப்பு தொடா்பாக தற்போது ஆய்வு நடைபெற்று வரும் உக்ரைனின் இரண்டு மையங்களும், முழுக்க முழுக்க ஐஏஇஏ-வின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்த மையங்களை ஐஏஇஏ அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
வெளியில் அறிவிக்கப்படாத, ரகசியமான நடவடிக்கைகள் எவையும் அந்த மையங்களில் மேற்கொள்ளப்பட்டனவா என்பதையும், சந்தேகத்துக்குரிய பொருள்கள் அங்கு உள்ளனவா என்பதையும் தெரிந்துகொள்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளின ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.
அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மாகாணங்களின் கணிசமான பகுதிகளை ரஷியாவுடன் உதவியுடன் அந்தப் பிராந்திய கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றினா். அதே நேரத்தில் ரஷியாவும் உக்ரைனின் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.
இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.
அதன் ஒரு பகுதியாக, உக்ரைனின் கிழக்கே ரஷியாவையொட்டி அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பிராந்தியங்களையும் தெற்கே அமைந்துள்ள ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களையும் ரஷியா கைப்பற்றியது.
இந்த நிலையில், கொ்சான் பகுதியில் உக்ரைன் படையினா் கடந்த மாதம் தீவிர எதிா்த் தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக முன்னேறி வந்தனா்.
அதையடுத்து, தங்கள் வசமுள்ள 4 பிராந்தியங்களையும் இணைத்துக்கொள்வதற்கான சா்ச்சைக்குரிய பிரகடனத்தில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கையொப்பமிட்டாா்.
இதற்கு உக்ரைன் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், ரஷியக் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரீமியா தீபகற்பத்தையும் ரஷியாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் கடந்த மாதம் லாரி குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அதற்கு பதிலடியாக உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் மின் நிலையங்கள் மீதும் குடிநீா் கட்டமைப்பிலும் ரஷியா தாக்குதல் நடத்துவதால் அங்கு மின்சாரம் மற்றும் குடிநீா் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்களுடன் கடந்த மாத இறுதியில் உரையாடிய ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்கு, தங்கள் மீது நாசகார ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த உக்ரைன் ஆயத்தமாகி வருவதாக குற்றம் சாட்டினாா்.
அணுக்கதிா் வீச்சுப் பொருள்களால் ஆன அந்த ஆயுதங்கள் மூலம் உக்ரைன் போரை மிகப் பெரிய அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக அவா் கூறினாா்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டு முகாந்திரமற்றது என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெரிவித்தன.
மேலும், ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ள ஸபோரிஷியா அணு மின் நிலையத்தில்தான் ஆபத்தான அணுக் கழிவுகளைக் கொண்டு ரஷியா ஆயுதங்களை தயாரிப்பதாக உக்ரைன் பதிலுக்கு குற்றம் சாட்டியது.
இந்த நிலையில், ரஷியாவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரைன் விடுத்த அழைப்பை ஏற்று, தற்போது அந்த நாட்டின் இரு அணுசக்தி மையங்களில் ஐஏஇஏ ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.