உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டியது!

உலக மக்கள் தொகை எட்டு பில்லியனாக (800 கோடி) இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டியது!

உலக மக்கள் தொகை எட்டு பில்லியனை (800 கோடி) இன்று எட்டியதாக ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை 200 கோடியாக அதிகரித்துள்ளது. 1998-ல் 600 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை 2010-ல் 700 கோடியாக அதிகரித்தது. அடுத்த 12 ஆண்டுகளில் அதாவது 2022-ல் மக்கள்தொகை 100 கோடியாக அதிகரித்து, நவம்பர் 15, 2022-ல் உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 2030 ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகை 850 கோடியை எட்டும். எனினும், 1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக 2020 ஆம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் ஒரு சதவீதம் குறைந்துள்ளது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. 

ஐ.நா.வின் மக்கள்தொகை அறிக்கையில், 2050-ல் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், எகிப்து, காங்கோ, நைஜீரியா, தான்சானியா மற்றும் எத்தியோப்பியா இந்த 8 நாடுகளில் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.

2022 மற்றும் 2050 ஆம் ஆண்டுக்கு இடையில் மக்கள்தொகை குறையும் 61 நாடுகளை ஐ.நா. கணித்துள்ளது. இந்த நாடுகளில் பெரும்பாலானவை ஐரோப்பாவைச் சேர்ந்தவையாக இருக்கும். தற்போது, 46 நாடுகளின் மக்கள்தொகை வேகமாக அதிகரித்து வருவதாக ஐ.நா. கணித்துள்ளது.

ஜூலை 11, 2022 அன்று, உலக மக்கள்தொகை தினத்தன்று ஐ.நா வெளியிட்ட அறிக்கையில், 2023 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கீட்டில், இந்தியாவின் மக்கள்தொகை சீனாவின் மக்கள்தொகையை விட அதிகமாக இருக்கும் என்று கூறியது. இதன் மூலம் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என்றும் தெரிவித்தது.

தற்போது சீனாவின் மக்கள் தொகை 1.426 பில்லியனாகவும், இந்தியாவின் மக்கள் தொகை 1.412 பில்லியனாகவும் உள்ளது. 2023-ல் இந்தியாவின் மக்கள் தொகை 1.429 பில்லியனாக உயரும் என நம்பப்படுகிறது. மேலும் 2050-ல் இந்த எண்ணிக்கை 1.668 பில்லியனை எட்டும். இந்த நூற்றாண்டின் நடுவில்  சீனாவின் மக்கள் தொகை 1.317 பில்லியனாக குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com