புது டிவிஸ்ட்: கூண்டோடு ராஜிநாமா செய்து மாஸ் காட்டும் டிவிட்டர் ஊழியர்கள்

நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்ற கெத்துடன் டிவிட்டர் ஊழியர்கள் கூண்டோடு ராஜிநாமா செய்து வருகிறார்கள்.
புது டிவிஸ்ட்: கூண்டோடு ராஜிநாமா செய்து மாஸ் காட்டும் டிவிட்டர் ஊழியர்கள்
புது டிவிஸ்ட்: கூண்டோடு ராஜிநாமா செய்து மாஸ் காட்டும் டிவிட்டர் ஊழியர்கள்


டிவிட்டர் நிறுவனத்தில் நடக்கும் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் என்று கிட்டத்தட்ட எச்சரிக்கும் வகையிலான மின்னஞ்சலை எலான் மஸ்க் அனுப்பியிருந்த நிலையில், நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்ற கெத்துடன் டிவிட்டர் ஊழியர்கள் கூண்டோடு ராஜிநாமா செய்து வருகிறார்கள்.

நவம்பர் 16ஆம் தேதி நள்ளிரவில் டிவிட்டர் ஊழியர்களுக்கு எலான் மஸ்க் அனுப்பிய மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றது. அதைப் பார்த்த ஊழியர்களின் இதயம் அப்போது ஒரு நிமிடம் நின்று கூட துடித்திருக்கலாம்.

அதாவது, டிவிட்டரை மிகக் கடினமான இடத்துக்குக் கொண்டு செல்லவிருப்பதாகவும், அனைத்து ஊழியர்களும் இப்போது இருப்பதை விட அதிக தீவிரமாக நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அளவுக்கு அதிகமான பணிநேரம் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருந்ததோடு மட்டுமல்லாமல், அதனுடன் ஒரு கூகுள் பார்ம் இணைத்திருந்தார். அதில் ஊழியர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு, ஆமாம் இல்லையென்றால் மூன்று மாதத்தில் வேலையைவிட்டுப் போகிறேன் என்ற வாய்ப்புகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தனர்.
 

ஆனால், டிவிட்டர் 2.0 திட்டத்துக்கு பல ஊழியர்களும் நோ சொல்லியிருப்பதாகவேத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியபோது, மிக முக்கிய சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரில் 7,500 பேர் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. பிறகு இது 2.900 ஆகக் குறைந்ததாகவும், தற்போது எலான் மஸ்க் அனுப்பிய மின்னஞ்சலைத் தொடர்ந்து இதில் எத்தனை தலைகள் உருண்டு, இப்போது எத்தனை தலைகள் இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்கின்றன தகவல்கள்.

பல டிவிட்டர் ஊழியர்கள், தங்களது ராஜிநாமா முடிவை பகிரங்கமாக அறிவித்துள்ளனர். பலரும் குழு குழுவாக, அணி அணியாக ராஜிநாமா முடிவை எடுத்திருப்பதாகவும், டிவிட்டர் செயல்பாட்டின் மிக முக்கியமான பொறியாளர் குழு முழுவதுமாக அல்லது கிட்டத்தட்ட முழுவதுமாக ராஜிநாமா செய்திருப்பதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

ஆனாலும், நான் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்றும், மிகச் சிறந்த நபர்கள் இருப்பார்கள். எனவே, நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை என்று எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். மேலும் டிவிட்டர் என்னவாகுமோ என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதற்கு, நாங்கள் டிவிட்டரை உயிரோடு வைத்திருப்போம் என்றும் பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஆர்ஐபி டிவிட்டர், குட்பாய் டிவிட்டர், டிவிட்டர்டவுன் போன்ற வார்த்தைகள் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com