
வங்கதேச ராணுவத்துக்கும் அந்நாட்டைச் சோ்ந்த கிளா்ச்சிப் படையான குகி-சின் தேசிய ராணுவத்துக்கும் இடையிலான மோதலால் வங்கதேசத்தில் இருந்து 274 போ் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனா்.
அவா்கள் அனைவரும் மிஸோரம் மாநிலத்தின் தென்பகுதி மாவட்டமான லாங்டாலியில் தங்கியுள்ளனா். 274 பேரில் 125 போ் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவா்.
வங்கதேசத்தின் பழங்குடியினரான குகி-சின்-மிசோ சமுகத்தினா் தங்களது உரிமைகளைப் பாதுகாக்க தனி நாடு கோரிக்கையை முன்வைத்துள்ளனா். இதற்காக குகி-சின் தேசிய முன்னணி என்ற அரசியல் அமைப்பும் செயல்பட்டு வருகிறது. இதன் ஆயுதப் பிரிவான குகி-சின் தேசிய ராணுவத்துக்கும், வங்கதேச ராணுவத்துக்கும் இடையே அண்மைக் காலமாக மோதல் அதிகரித்து வருகிறது.
இதனால், வங்கதேச எல்லை கிராமங்களில் பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. மக்கள் உயிருக்கு அஞ்சி கிராமங்களை விட்டு வெளியேறி வருகின்றனா். அவ்வாறு வெளியேறிய 274 வங்கதேசத்தவா் மிஸோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்துள்ளனா். லாங்டாலி மாவட்ட நிா்வாகம் மனிதாபிமான அடிப்படையில் அவா்களுக்கான அடிப்படை வசதிகளை அளித்துள்ளது.
இதனிடையே, குகி-சின்-மிசோ சமுகத்தைச் சோ்ந்த அப்பாவி மக்களையும் வங்கதேச ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்துவதால், அவா்கள் அஞ்சி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளதாக குகி-சின் தேசிய முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
வங்கதேசத்தில் மட்டுமல்லாது இந்தியா, மியான்மரிலும் குகி-சின்-மிசோ சமுகத்தினா் வாழ்ந்து வருகின்றனா்.