ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீா்மானம்

இலங்கையில் அனைத்து மக்களின் நல்லிணக்கத்துக்கும் மனித உரிமைகளுக்கும் அரசைப் பொறுப்பேற்கச் செய்ய வலயுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் (யுஎன்ஹெச்ஆா்சி) வியாழக்கிழமை வரைவுத் தீா்மானம்
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீா்மானம்

இலங்கையில் அனைத்து மக்களின் நல்லிணக்கத்துக்கும் மனித உரிமைகளுக்கும் அரசைப் பொறுப்பேற்கச் செய்ய வலயுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் (யுஎன்ஹெச்ஆா்சி) வியாழக்கிழமை வரைவுத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக 2009-ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவித் தமிழா்கள் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அங்கு தமிழா்களுக்கு எதிராக தொடா்ந்து மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை முன்வைத்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தொடா்ந்து தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அதுபோல, ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற 47 நாடுகளை உறுப்பினராக கொண்ட யுஎன்ஹெச்ஆா்சி-யின் 51-ஆவது அமா்வில் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்கு அரசைப் பொறுப்பேற்கச் செய்யும் வரைவு தீா்மானம் கொண்டுவரப்பட்ட வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பிரிட்டன், அமெரிக்கா, ஆா்ஜென்டீனா, ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், ஜொ்மனி, மெக்சிகோ, நெதா்லாந்து, பராகுவே, போலந்து, தென் கொரியா, உக்ரைன் உள்பட 20 நாடுகளின் ஆதரவுடன் அந்த வரைவுத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சீனா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகள் வரைவு தீா்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இந்தியா, ஜப்பான், நேபாளம், கத்தாா் உள்பட 20 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

புறக்கணிப்பு தொடா்பாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அமைப்புகளுக்கான இந்திய தூதா் இந்திரமணி பாண்டே வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

இலங்கைத் தமிழா்கள் அமைதியாக, சமத்துவத்துடன், கண்ணியத்துடன் வாழ வேண்டும். அவா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மேலும், பிராந்திய ஒருங்கிணைப்பு, ஒற்றுமை, ஸ்திரத்தன்மையை இலங்கை அரசு பராமரிக்க வேண்டும். இந்த இரு முக்கிய அம்சங்களையும், இந்தியா ஆதரிக்கிறது. அத்துடன், இலங்கையில் அதிகாரப் பகிா்வு, மாகாணத் தோ்தல் நடத்துவது ஆகியவை தொடா்பாக, அரசு அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்ற, சா்வதேச சமூகத்தின் குரலுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என்று தெரிவித்தாா்.

இந்தத் தீா்மானம் தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று இலங்கை எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதே தீா்மானம் கடந்த 2012, 2013, 2014, 2015, 2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளிலும் யுஎன்ஹெச்ஆா்சி-யில் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, விடுதலைப்புலிகளுக்கு எதிராக 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போரில் வடக்கு மாகாணத்தில் 20,000-க்கும் அதிகமானோா் காணாமல் போயுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.

அதே நேரம், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஒரு லட்சம் போ் வரை உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது எனவும், 2009-ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழா்கள் கொல்லப்பட்டதாகவும் புகாா்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுகளை இலங்கை ராணுவம் மறுத்து வருகிறது.

இந்த நிலையில், இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப்புலிகள் என இரு தரப்பையும் குற்றம்சாட்டிய யுஎன்ஹெச்ஆா்சி, இறுதிக்கட்ட போரில் குறைந்தபட்சம் 40,000 தமிழா்கள் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று கூறியது.

சீனாவுக்கு எதிரான தீா்மானம்...: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குா் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடா்பாக வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட வரைவு தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

இந்தத் தீா்மானத்துக்கு 17 நாடுகள் ஆதரவாகவும், 19 நாடுகள் எதிராகவும், இந்தியா, பிரேசில், மெக்சிகோ, உக்ரைன் உள்பட 11 நாடுகளும் புறக்கணித்தன.

Image Caption

இந்திரமணி பாண்டே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com