காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராகாத உலகம்: ஐ.நா. கவலை

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் இன்னும் தயாராகவில்லை என ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் இன்னும் தயாராகவில்லை என ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது. 

காலநிலை மாற்ற பிரச்னை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு நாடுகளும் பெருமழை, வெள்ளம், அதீத வெப்ப அலைகளின் பாதிப்பு, பருவநிலை பிறழ்வு உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் அதிகரித்துவரும் காலநிலை மாற்ற பாதிப்புகளுக்கு மத்தியில் உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் பேரிடரை எதிர்கொள்வதற்கு இன்னும் தயாராகவில்லை என ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மற்றும் பேரிடர் தடுப்பு அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உலக நாடுகள் மோசமான நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 

காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் உலக நாடுகள் அக்கறையின்மையுடன் உள்ளதாகவும் உலகின் வளர்ந்த நாடுகள் மற்றும் மூன்றில் ஒரு தீவு நாடுகளும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இது மேலும் பல நாடுகளுக்கும் பரவலாக்கப்பட வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2005 முதல் 2014ஆம் அஆண்டு வரையிலான காலத்தில் லட்சம் பேரில் 1147 பேர் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் 2012 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இதே எண்ணிக்கையானது 2066ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல் பேரிடர் காலத்தில் காணாமல் போன அல்லது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை லட்சம் பேரில் 1.77ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய சமகாலகட்டத்தில் 0.84ஆக இருந்தது. 

இதுதொடர்பாக பேசிய ஐநா அவையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டேரஸ், “காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்பிற்கு உலகம் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com