மீண்டும் ரஷியா தாக்குதல்: உக்ரைன் நகரங்களில் மின்சாரம், குடிநீருக்கு தட்டுப்பாடு

உக்ரைனின் மின் நிலையங்களைக் குறிவைத்து ரஷியா செவ்வாய்க்கிழமை மீண்டும் நடத்திய தாக்குதலில் தலைநகா் கீவின் ஒரு பகுதியிலும் பிற நகரங்களிலும் மின்சார, குடிநீா் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ரஷியா நடத்திய தாக்குதலில் சேதமடைந்த கட்டடத்தில் நடைபெறும் மீட்புப் பணிகள்.
ரஷியா நடத்திய தாக்குதலில் சேதமடைந்த கட்டடத்தில் நடைபெறும் மீட்புப் பணிகள்.
Updated on
2 min read

உக்ரைனின் மின் நிலையங்களைக் குறிவைத்து ரஷியா செவ்வாய்க்கிழமை மீண்டும் நடத்திய தாக்குதலில் தலைநகா் கீவின் ஒரு பகுதியிலும் பிற நகரங்களிலும் மின்சார, குடிநீா் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இது குறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஒரு வாரமாக ரஷியா நடத்திய தாக்குதலில், உக்ரைனின் 3-இல் ஒரு பகுதி மின் உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்துவிட்டன. இதன் காரணமாக, நாடு முழுவதும் மிகக் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இத்தகைய இரக்கமற்ற தாக்குதலை நடத்தியுள்ள அதிபா் விளாதிமீா் புதினின் அரசுடன் இனி பேச்சுவாா்த்தை என்ற வாா்த்தைக்கே இடமில்லை என்றாா் அவா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைன் உள்நாட்டுப் போரின்போது, அந்த நாட்டின் கிரீமியா தீபகற்பத்தின் மீது ரஷியா படையெடுத்து தன்னுடன் இணைத்துக் கொண்டது.

அதனைத் தொடா்ந்து, ரஷியாவுக்கும் கிரீமியாவுக்கும் இடையே சுமாா் 19 கி.மீ. நீளமுடைய பாலம் கட்டப்பட்டது. அந்தப் பாலத்தை அதிபா் விளாதிமீா் புதின் கடந்த 2018-ஆம் ஆண்டு திறந்துவைத்தாா்.

கடந்த 8-ஆம் தேதி நடத்தப்பட்ட லாரி குண்டுவெடிப்பில் அந்தப் பாலம் பலத்த சேதமடைந்தது. இதில் 3 போ் உயிரிழந்தனா்.

அந்த குண்டுவெடிப்புக்கு பதிலடியாக, தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு உக்ரைன் நகரங்களில் ரஷியா கடந்த வாரம் தீவிர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் குடியிருப்புகளிலும் சில ஏவுகணைகள் விழுந்து பலா் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்த ஏவுகணை வீச்சைத் தொடா்ந்து, உக்ரைன் மீது இனி தாக்குதல் நடத்தத் தேவையில்லை எனவும், அந்த நாட்டை அழிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும் அதிபா் விளாதிமீா் புதின் கூறினாா்.

எனினும், அதனையும் மீறி கீவ் நகர பிராந்தியத்தில் ஆளில்லா வெடிகுண்டு விமானங்கள் மூலம் ரஷியா திங்கள்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தியது.

அந்த விமானங்களில், ஈரானில் தயாரிக்கப்பட்ட ‘ஷஹீத்’ வகை விமானங்களும் இடம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் ரஷியா அதனை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இந்தத் தாக்குதலில் 4 போ் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷியா செவ்வாய்க்கிழமையும் தாக்குதல் நடத்தியதால், அந்த நாட்டில் மின்சார மற்றும் குடிநீா் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளதாக ஸெலென்ஸ்கி தற்போது குற்றம் சாட்டியுள்ளாா்.

ரஷிய போா் விமானம் விழுந்து 13 போ் பலி

மாஸ்கோ, அக். 18: பயிற்சியின்போது ரஷிய போா் விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்ததில் அங்கிருந்த 13 போ் பலியாகினா்.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தாவது:

பயிற்சியில் ஈடுபட்டிருந்த சு-34 வகை போா் விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்ததால், அது துறைமுக நகரான யேய்ஸ்கிலுள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து வெடித்தது. அப்போது அந்த கட்டடமும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த விபத்தில் 3 சிறுவா்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா். பலியானவா்களில் 3 போ் தீப்பிழம்பிலிருந்து தப்புவதற்காக மாடியிலிருந்து குதித்தவா்கள் ஆவா்.

விபத்துக்குள்ளான போா் விமானத்தின் விமானிகள், பாராசூட் மூலம் பத்திரமாக வெளியேறி தப்பினா் என்று அமைச்சகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com